''தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; விரைவில் மாநில கல்விக்கொள்கை'' - அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்
தேசியக் கல்விக் கொள்கைக்கு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்ற கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கைக்கு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லையா என்ற கேள்விக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். விரைவில் மாநில கல்விக்கொள்கை அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி இன்று சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நுண்ணுயிரியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறையின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே. மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசும்போது கூறியதாவது:
’’எந்த துறை மாணவர்களாக இருந்தாலும் Inter Disciplinary படிப்புகள் முக்கியம். ஒரு காலத்தில் சமையல் கட்டில் மட்டுமே பெண்கள் இருந்தனர். அந்த நிலையை மாற்றி துறைத் தலைவராகவும் கல்லூரி முதல்வராகவும் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களாகவும் பெண்கள் உயர்ந்திருக்கின்றனர்.
அந்தக் காலத்தில் எத்தனை பேர் படித்தனர்? அதில் எந்த சாதியினர் அதிகமாக படித்தனர்? வேலை வாய்ப்புகள் எந்தப் பிரிவினருக்கு அதிகமாக கிடைத்தது? பெண்களுக்கு அதில் இருந்த பிரதிநிதித்துவம் ஆகிய அனைத்தும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
பெண்கள் படிக்க வேண்டும், கல்லூரிக்குச் சென்று உயர் கல்வி பெற்று அரசுப் பதவிகளில் அமர வேண்டும். தொழில் முனைவோர்களாகவும் மாற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் 'நான் முதல்வன்' திட்டம். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு எனப் பாடத்திட்டக் குழு அமைக்கப்பட்டு தேவைக்கு ஏற்ப, நடைமுறைக்கு ஏற்ற வகையில் காலத்திற்கு ஏற்ப பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கக் குழு அமைக்கப்பட்டு, புதிய பாடத்திட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. விரைவில் முதுகலை மாணவர் சேர்க்கை தொடங்கும். இதற்கான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும்.
தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்!
தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மத்தியக் கல்வி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமான எதிர்ப்பை தமிழ்நாடு முதல்வரே பதிவு செய்துள்ளார். எதற்காக எதிர்க்கிறோம் என்ற காரணங்களையும் அதில் சொல்லி இருக்கிறோம். சுபாஸ் சர்க்கார் கல்வித்துறை இணை அமைச்சர் என்பதால், அவருக்கு தமிழ்நாட்டின் எதிர்ப்பு பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாட்டில் மாநில கல்விக்கொள்கையை உருவாக்கி வருகிறோம். அவை விரைவில் வெளியாகி உள்ளது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும். 3,5,8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கொண்டுவந்தால் இடைநிற்றல் அதிகரிக்கும். 10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதே போதுமானது.
3-வது மொழி எதற்கு?
தாய்மொழி தமிழும், சர்வதேச மொழி ஆங்கிலமும் இருக்கும் போது 3-வது மொழி எதற்கு? 3-வது மொழி கற்க வேண்டுமானால் கற்றுக்கொள்ளலாம். ஆனால் கட்டாயப்படுத்தக் கூடாது. தமிழ்நாட்டில் எப்போதும் இருமொழிக் கொள்கைதான் அமலில் இருக்கும்’’.
இவ்வாறு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மேலும் வாசிக்க: Puthumai Penn scheme: மாதாமாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்: எதற்கு, யாருக்கு, ஏன்? - ஓர் அலசல்