Puthumai Penn scheme: மாதாமாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம்: எதற்கு, யாருக்கு, ஏன்? - ஓர் அலசல்
Puthumai Penn Thittam in Tamil: தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
Puthumai Penn Thittam: கல்லூரி மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் எதற்காக, யாருக்கு, ஏன் வழங்கப்படுகிறது? இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் என்ன? பார்க்கலாம்.
தாலிக்குத் தங்கம் திட்டம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 1989-ல் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் படிக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்த பெண்களின் திருமணத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
அதற்குப் பிறகு 2011-ல் ஆட்சிக்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தாலிக்குத் தங்கம் என்னும் முறையை அறிமுகப்படுத்தி, 4 கிராம் தங்கத்தை வழங்க ஆரம்பித்தார். 2016-ல் மீண்டும் முதலமைச்சரானபோது 8 கிராம் தங்கம் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்த சூழலில், முதல்முறையாக முதலமைச்சராகப் பதவியேற்ற மு.க.ஸ்டாலினும் கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி தாலிக்குத் தங்கம் திட்டத்தின்கீழ், திருமண நிதியுதவி, தங்கம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். எனினும் 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ’’மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.
இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்’’ என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து இன்று (செப்.5) முதல் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு உயர் கல்வி உறுதித் திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர் கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது.
யாருக்கெல்லாம் வழங்கப்படும்?
ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டம் பொருந்தும்.
சான்றிதழ், பட்டயம் , இளங்கலைப் பட்டம் , தொழில் சார்ந்த படிப்பு மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு போன்றவைகளில் சேருபவர்களுக்கு இது பொருந்தும்.
தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.
அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடரும் அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
தொழில்நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்குத் தகுதியானவர்கள்.
இத்திட்டத்தினைச் செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில் இணைய தளம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு மாதாமாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், ஆசிரியர் தினமான செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற விழாவில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். இந்தத் திட்டத்துக்கு புதுமைப் பெண் திட்டம் (Puthumai Penn Thittam) என்று அண்மையில் பெயர் சூட்டப்பட்டது.
3 லட்சம் மாணவிகள் விண்ணப்பம்
இந்தத் திட்டத்தின்கீழ் சுமார் 3 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்ததாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், 2022ஆம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் சேரும் 9,981 அரசுப் பள்ளி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 உயர் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
அதேபோல பிற படிப்புகளிலும் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் என சுமார் 1 லட்சம் மாணவிகளுக்கு, புதுமைப் பெண் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1000 உயர் கல்வி உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது.