CUET UG Result: பாதிக்கும் கல்லூரி சேர்க்கை, பரிதவிக்கும் மாணவர்கள்: க்யூட் தேர்வு முடிவுகள் எப்போது?
CUET UG 2024 result: நீட் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியாகிவிட்டன. பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. எனினும் க்யூட் தேர்வு முடிவுகள் மட்டும் இதுவரை வெளியாகவில்லை.
2024ஆம் ஆண்டுக்கான க்யூட் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வை எழுதிய மாணவர்கள், வழி மேல் விழிவைத்துக் காத்திருக்கின்றனர்.
நாடு முழுவதும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர க்யூட் எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. 2022 முதல் இந்தத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. சில தனியார் பல்கலைக்கழகங்களும் க்யூட் தேர்வை அடிப்படையாக வைத்தே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன. இதனால் நிறைய மாணவர்கள் க்யூட் தேர்வை எழுதத் தொடங்கி உள்ளது.
மே மாதம் நடந்த க்யூட் தேர்வு
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான இளநிலை க்யூட் தேர்வு மே மாதம் 15, 16, 17, 18, 21, 22, 24 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. நாடு முழுவதும் கலப்பு முறையில் அதாவது கணினி மற்றும் பேனா, காகித முறையில் தேர்வு நடந்தது. இந்தியாவுக்கு வெளியே 26 நகரங்கள் உட்பட 379 நகரங்களில் நடைபெற்ற தேர்வை 13.48 லட்சம் மாணவர்கள் எழுத விண்ணப்பித்து இருந்தனர்.
தொடர்ந்து ஜூலை 7 முதல் 9ஆம் தேதி வரை ஆட்சேபனைக்கு உரிய விடைக் குறிப்புகள் பெறப்பட்டன. பாட வாரியாக குறிப்புகள் பெறப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டன. இவற்றுக்கான இறுதி விடைக் குறிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
தேர்வு முடிவுகள் எப்போது?
இதற்கிடையே எப்போது க்யூட் இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கேள்வி எழுந்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியாகிவிட்டன. பொறியியல் கலந்தாய்வு தொடங்க உள்ளது. எனினும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் க்யூட் தேர்வு முடிவுகள் மட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியப் பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்களில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் தேர்வை எழுதியவர்கள், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தேர்வை நடத்திய தேசியத் தேர்வுகள் முகமை உடனே க்யூட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடுதல் தகவல்களுக்கு 011 - 40759000 / 011 - 69227700 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
இணைய முகவரி: www.nta.ac.in , https://exams.nta.ac.in/CUET-UG/