CSIR UGC NET: நீங்களும் ஆசிரியர் ஆகலாம்; சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு பதிவு நீட்டிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
CSIR UGC NET 2025: சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வுக்கான டிசம்பர் மாத அமர்வு டிசம்பர் 18 அன்று நடைபெற உள்ளது. தேர்வு நேரம் 180 நிமிடங்கள் ஆகும்.

தேசியத் தேர்வுகள் முகமை (NTA), அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) பல்கலைக்கழக மானியக் குழு (UGC) தேசிய தகுதித் தேர்வு (NET)-க்கான விண்ணப்பப் பதிவு அவகாசத்தை நீட்டித்துள்ளது. சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு தேர்வுக்கான விண்ணப்பப் பதிவை அக்டோபர் 27 வரை மேற்கொள்ளலாம்.
முன்பு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு அக்டோபர் 24 ஆக இருந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப விண்ணப்ப அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கான கட்டணத்தை அக்டோபர் 28ஆம் தேதி வரை செலுத்தலாம். அதேபோல விண்ணப்பங்களில் திருத்த செய்ய அக்டோபர் 27 முதல் அக்டோபர் 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு எப்போது?
சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வுக்கான டிசம்பர் மாத அமர்வு டிசம்பர் 18 அன்று நடைபெற உள்ளது. தேர்வு நேரம் 180 நிமிடங்கள் ஆகும். முதல் ஷிப்ட் காலை 9:30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், இரண்டாவது ஷிப்ட் மாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் மற்றும் அனுமதி அட்டை விவரங்கள், தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட உள்ளன.
எதற்காக இந்தத் தேர்வு?
CSIR UGC NET தேர்வு ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF), உதவிப் பேராசிரியர் நியமனங்கள் மற்றும் பிஎச்டி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு ஆனது அறிவியல், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் தேர்வர்களைத் தேர்ந்தெடுக்க நடத்தப்படுகிறது. இது இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் மற்றும் புவியியல் போன்ற பாடங்களை உள்ளடக்கியது.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- அதற்கு முதலில் https://csirnet.nta.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
- கேட்கப்பட்டிருக்கும் தேவையான விவரங்களை உள்ளிட வேண்டும்.
- விண்ணப்பக் கட்டணத்தை டெபிட் கார்டு / கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ முலம் ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும்.
- அதன் பிறகு விண்ணப்பித்து விடலாம்.
- தேர்வர்கள் ஒரு முறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டியதும் முக்கியம்.
தொலைபேசி எண்கள்: 011- 40759000 அல்லது 011-69227700
இ- மெயில் முகவரி: csirnet@nta.ac.in
முழுமையான விவரங்களை அறிய: https://csirnet.nta.ac.in , www.nta.ac.in






















