நீட் தேர்வு வினாத்தாள் கசிவு 2 இடத்திலா? நாடு முழுவதும் பரவியுள்ளதா?- உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
வினாத்தாள் கசிவு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நடந்துள்ளதா? ஹசாரிபக் மற்றும் பாட்னாவில் மட்டுமே நடைபெற்றுள்ளதா அல்லது முறைப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பரவியுள்ளதா?
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நடந்துள்ளதா? ஹசாரிபக் மற்றும் பாட்னா என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நடைபெற்றுள்ளதா அல்லது முறைப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பரவியுள்ளதா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கேள்வி எழுப்பி உள்ளார்.
மே 4ஆம் தேதியே வினாத்தாள் கசிவு
உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் குறித்த வழக்கு விசாரணை இன்று (ஜூலை 22) தொடங்கி நடைபெற்று வருகிறது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா ஆஜர் ஆகி வாதாடி வருகிறார். அவர் கூறும்போது, ’’பிஹார் போலீஸ் விசாரணையில் மே 4ஆம் தேதியே வினாத்தாள் கசிவு நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் வினாத்தாள் அந்தந்த வங்கிகளில் வைக்கப்படும் முன்னரே கசிந்துள்ளது தெரிய வந்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் கூறும்போது, ’’வினாத்தாள் கசிவு குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் நடந்துள்ளதா? ஹசாரிபக் மற்றும் பாட்னாவில் மட்டுமே நடைபெற்றுள்ளதா அல்லது முறைப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் பரவியுள்ளதா? எதன் அடிப்படையில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது?’’ என்று கேள்விகளை எழுப்பி உள்ளார்.
தனி நபர்களின் கைகளில் வினாத்தாள்
மனுதாரர் தரப்பில் கூறும்போது, ’’தேசியத் தேர்வு முகமையின் கூற்றுப்படி நீட் வினாத்தாள்கள் ஏப்ரல் 24ஆம் தேதியே அனுப்பப்பட்டு விட்டன. மே 3ஆம் தேதி சம்பந்தப்பட்ட வங்கிகளுக்குச் சென்று சேர்ந்துள்ளன. ஏப்ரல் 24 முதல் மே 3 ஆகிய நாட்களுக்கு இடையிலான காலகட்டத்தில் தனி நபர்களின் கைகளில் இருந்துள்ளது ’’ என்று குற்றம் சாட்டினர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
நீட் வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
இரு பதில்கள் சரி என்று குறிப்பிடப்பட்ட கேள்விக்கு சரியான பதிலை அளிக்க, மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க டெல்லி ஐ.ஐ.டி இயக்குனருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த கேள்விக்குரிய பதிலை நாளை (ஜூலை 23) நண்பகல் 12 மணிக்குள் உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நீட் முறைகேடு தொடர்பான வழக்கு நாளைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.