மும்மொழி, 10ஆம் வகுப்பில் 10 பாடங்கள், பிளஸ் 2வில் 6 பாடங்கள் தேர்ச்சி கட்டாயம்: சிபிஎஸ்இ பரிந்துரை
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மும்மொழிக் கொள்கையைப் பொறுத்தவரை, 2 மொழிகள் கட்டாயம் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ, மாணவர்கள் 3 மொழியைப் படிக்க வேண்டும் என்றும் 10ஆம் வகுப்பில் 5 பாடங்களுக்குப் பதிலாக 10 பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் 12ஆம் வகுப்பில் 6 பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும் எனவும் பரிந்துரைகளை முன்மொழிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தேசிய கல்விக் கொள்கை அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
மும்மொழிக் கொள்கையைப் பொறுத்தவரை, 2 மொழிகள் கட்டாயம் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொது மொழியான ஆங்கிலத்துடன், தாய் மொழியையும் கூடுதலாக ஓர் இந்திய மொழியையும் மாணவர்கள் கற்க வேண்டும்.
கூடுதல் பாடங்கள்
10ஆம் வகுப்பில் மாணவர்கள் 5 பாடங்களுக்குப் பதிலாக இனி 10 பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் ஆக்கப்படும். இதில் ஆங்கிலத்தோடு 2 இந்திய மொழிகளும் பாடமாக இருக்கும்.
12ஆம் வகுப்பைப் பொறுத்தவரை ஒரு மொழிப் பாடத்தைத் தாண்டி, 2 மொழிப் பாடங்கள் கொண்டு வரப்படும். இதில் ஓர் இந்திய மொழி கட்டாயமாக இருக்கும். மொத்தமாக 5 பாடங்களுக்கு பதிலாக 6 பாடங்கள் இனி எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.
பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள் அனைத்தும், பள்ளிக் கல்வியில் தேசிய கிரெடிட் கட்டமைப்பை (national credit framework) அறிமுகப்படுத்தும் முயற்சியே என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. இந்த கட்டமைப்பு மூலம் தொழிற்கல்விக்கும் பொதுக் கல்விக்கும் இடையிலான சமநிலையை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிரெடிட் அமைப்பு முறை
பாரம்பரிய பள்ளி பாடத்திட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட கிரெடிட் அமைப்பு முறை இல்லை. சிபிஎஸ்இ முன்மொழிவில், ஒரு முழு கல்வியாண்டில், 1200 கற்றல் மணித்துளிகள் (notional learning) அல்லது 40 கிரெடிட்டுகள் இருக்கும்.
இதில் ஒவ்வொரு பாடத்துக்கும் குறிப்பிட்ட மணிநேரங்கள் ஒதுக்கப்படும். ஏபிசி எனப்படும் அகாடமிக் பேங்க் ஆஃப் கிரெடிட்ஸ் டிஜி லாக்கர் கணக்கைப் பயன்படுத்தும். இது மாணவர்கள் பெற்ற கிரெடிட்களை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும்.
என்ன மாற்றம்?
ஏற்கெனவே சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்கள், 2 மொழிப் பாடங்கள் மற்றும் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய முக்கியப் பாடங்களும் உள்ளன. பரிந்துரைக்கப்பட்ட மாற்றத்தின் மூலம், 10ஆம் வகுப்பு மாணவர்கள் 3 மொழிப் பாடங்களையும் 7 முக்கியப் பாடங்களையும் படித்துத் தேர்ச்சி பெற வேண்டும். இதில் 2 மொழிகள், இந்திய மொழிகளாக இருக்க வேண்டும்.
என்னென்ன பாடங்கள்?
10 ஆம் வகுப்புக்கு கணிதம் மற்றும் கணக்கீட்டு சிந்தனை (computational thinking), சமூக அறிவியல், அறிவியல், கலைக் கல்வி, உடற்கல்வி மற்றும் நல்வாழ்வு, தொழிற்கல்வி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆகிய ஏழு முக்கிய பாடங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
11, 12ஆம் வகுப்புக்கு எப்படி?
11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏற்கெனவே இருக்கும் 5 பாடங்களுக்கு பதிலாக (ஒரு மொழி மற்றும் 4 முக்கியப் பாடங்கள்) 6 பாடங்கள் (2 மொழிகள், 4 பாடங்கள்.. விருப்பப்பட்டால் 5ஆவது பாடத்தையும் படிக்கலாம்) எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.
இதுகுறித்த 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான முன்மொழிவு அடங்கிய விவரம், சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.