CBSE Board Exam 2023: ஜன.2 முதல் சிபிஎஸ்இ செய்முறைத் தேர்வுகள்; வெளியான அறிவிப்பு- விவரம்
2022- 23ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்று வாரியம் தெரிவித்துள்ளது.
2022- 23ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள் மற்றும் அக மதிப்பீடுகளை பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக சிபிஎஸ்இ வாரிய 2020ஆம் ஆண்டு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்களின் கடந்த கால செயல்திறன், காலாண்டு மற்றும் அரையாண்டு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
அதுபோன்ற எதிர்பாராத சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக, இரு பருவப் பொதுத் தேர்வு முறையை சிபிஎஸ்இ அறிவித்தது. புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித் தாள்களும், மாற்றி அமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அந்த வகையில் தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், 2022- 23ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு அட்டவணை வெளியாகி உள்ளது. அதன்படி, சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட வேண்டும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. செய்முறைத் தேர்வுகள், தேர்வு மதிப்பீடுகள் மற்றும் அக மதிப்பீடுகளை பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய காலத்துக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்கப் பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேர்வுகளின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. விதிமுறைகளைக் காண: https://www.cbse.gov.in/cbsenew/documents//Practical_Guidelines_and_SOPs_For_all%20_Sessions_27122022.pdf
அதேபோல மாணவர் செய்முறைத் தேர்வுகளுக்கு வராத பட்சத்தில், Absent என்று குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாணவர் எதாவது ஒரு காரணத்தால், குறிப்பிட்ட தேர்வன்று வராத சூழலில், Re-scheduled என்று குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. Re-scheduled என்று குறிப்பிடப்பட்டுள்ள மாணவர்களுக்கு, சிபிஎஸ்இ வாரியம் கூறும் தேதியில் பள்ளிகள் மீண்டும் மறு தேர்வு நடத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுத் தேர்வுகள் எப்போது?
எனினும் பொதுத் தேர்வு தேதிகள் இதுவரை வெளியாகவில்லை. இந்தத் தேர்வு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 15 முதல் இந்தத் தேர்வுகள் தொடங்குகின்றன. 10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வை 34 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதில் 18 லட்சம் பேர் 10ஆம் வகுப்பு மாணவர்கள் ஆவர். 12ஆம் வகுப்பில் இருந்து 16 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
கல்லூரி நுழைவுத் தேர்வுகளான நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்டவற்றுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், சிபிஎஸ்இ விரைந்து தேதிகளை அறிவிக்க வேண்டும் என்று மாணவர்களும் பெற்றோர்களும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.