CBSE 10th Result 2025: வீறுகொண்டு எழுந்த விஜயவாடா; சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வில் யார் டாப்? எந்தப் பள்ளிகளில் அதிகத் தேர்ச்சி?
CBSE 10th Results 2025 Region Wise: கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டிலும் திருவனந்தபுரம் மண்டலம் 99.79 சதவீத தேர்ச்சியோடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் விஜயவாடாவும் அதே சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 13ஆம் தேதி) வெளியான நிலையில், அதில் திருவனந்தபுரம், விஜயவாடா மண்டலங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.
2024- 25ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற இந்தப் தேர்வுகள் பிப்ரவரி 15-ல் தொடங்கி மார்ச் 18ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்தத் தேர்வை 26,675 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள், 7837 தேர்வு மையங்களில் எழுதினர்.
93.66 % மாணவ மாணவிகள் தேர்ச்சி
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 23 லட்சத்து 71,939 பேர் தேர்வை எழுதிய நிலையில், 22 லட்சத்து 21 ஆயிரத்து 636 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, 93.66% பேர் ஒட்டுமொத்தமாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.06 சதவீதம் அதிகம் ஆகும்.
95 சதவீத மாணவிகளும் 92.63 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்மூலம் வழக்கம்போல மாணவிகளே மாணவர்களைக் காட்டிலும் 2.37 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதலிடம் பிடித்த திருவனந்தபுரம்
கடந்த ஆண்டுகளைப் போல இந்த ஆண்டிலும் திருவனந்தபுரம் மண்டலம் 99.79 சதவீத தேர்ச்சியோடு முதலிடத்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் விஜயவாடாவும் அதே சதவீதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது.
பெங்களூரு மண்டலம், 98.9 சதவீதத் தேர்ச்சியைக் கொண்டுள்ளது. சென்னை 98.71 சதவீதத் தேர்ச்சியோடு நான்காவது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் குவாஹாட்டி மண்டலம், 84.14 தேர்ச்சி விகிதத்தைப் பெற்றுள்ளது.

ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் டாப்
12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளைப் போலவே, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளே அதிகத் தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இவை 99.49 சதவீதத் தேர்ச்சியை உறுதி செய்துள்ளன. கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் 99.45 சதவீதத் தேர்ச்சியையும் தனிப் பள்ளிகள் 94.17 சதவீதத் தேர்ச்சியையும் பெற்றுள்ளன.
எஸ்டிஎஸ்எஸ் பள்ளிகள், 91.53 சதவீதத் தேர்ச்சியையும் அரசுப் பள்ளிகள் 89.26 சதவீதத் தேர்ச்சியையும் பெற்றுள்ளன. அரசு உதவிபெறும் பள்ளிகள் குறைந்தபட்சமாக 83.94 சதவீதத் தேர்ச்சி கொண்டுள்ளன.
தேர்வு முடிவுகளைப் பார்ப்பது எப்படி?
* மாணவர்கள் ஆன்லைனில் cbseresults.nic.in, cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களுக்குச் சென்று பார்த்து, தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
* டிஜி லாக்கர், உமாங் செயலிகளைக் கொண்டும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
* குறுஞ்செய்தி வாயிலாகவும் இந்தத் தேர்வு முடிவுகளைப் பெற முடியும்.





















