UGC: மாணவர்களின் கட்டணத்தை திருப்பித் தராவிட்டால் அங்கீகாரம், மானியம் ரத்து: யுஜிசி எச்சரிக்கை
மாணவர்களுக்குக் கட்டணத்தைத் திருப்பி அளிக்கும் யுஜிசி நெறிமுறைகளைப் பின்பற்றாத கல்லூரி நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
கல்லூரி சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு முழு கல்விக் கட்டணத்தையும் திருப்பித் தராத கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் ரத்து, மானியம் ரத்து போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று யுஜிசி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் செயலர் மணிஷ் ஜோஷி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"கல்லூரிகளில் சேர்ந்து குறிப்பிட்ட அவகாசத்துக்கு முன்னதாக சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு உரிய விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் செலுத்திய கட்டணங்களை திருப்பித் தரவேண்டும். இதுதொடர்பாக டிசம்பர் 2020, ஆகஸ்ட் 2022, ஜூலை 2023, பிப்ரவரி 2024, ஜூன் 2024 காலகட்டங்களில் யுஜிசி உயர் கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
விதிமுறைகள் என்னென்ன?
சுற்றறிக்கையின்படி ஒவ்வொரு கல்வியாண்டிலும் கல்லூரி சேர்க்கையை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் ரத்து செய்யும் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட முழுக் கட்டணத்தையும் கல்லூரிகள் திருப்பி தர வேண்டும்.
அதேபோல், அக்டோபர் 31ஆம் தேதிக்குள் ரத்து செய்தால் சேர்க்கைப் பணிகளுக்காக ரூ.1,000 மட்டும் மாணவர்களிடம் வசூலிக்கலாம். அக்டோபர் 31ஆம் தேதிக்குப் பிறகு சேர்க்கையை ரத்து செய்பவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கான கட்டணத்தை மட்டும் பிடித்தம் செய்துகொள்ளலாம். அதே நேரத்தில் முழுக் கல்வியாண்டு அல்லது நடப்பு செமஸ்டருக்கான கட்டணத்தைப் பிடித்தம் செய்யக்கூடாது.
தொடர்ச்சியாக எழும் புகார்கள்
இந்த விதிமுறைகள் யுஜிசி அங்கீகாரம் பெற்ற உயர் கல்வி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. எனினும் இந்த வழிமுறைகளை கணிசமான கல்லூரிகள் முறையாக பின்பற்றுவதில்லை என தொடர்ச்சியாகப் புகார்கள் வருகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் யுஜிசி விதிமுறைகளை கல்லூரிகள் அவசியம் பின்பற்ற வேண்டும்.
தவறும் பட்சத்தில் யுஜிசி விதிகளின்படி உயர்கல்வி நிறுவனங்களின் திறந்தநிலை, இணையவழி படிப்புக்கான அங்கீகாரம் ரத்து போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல, மானியங்கள் நிறுத்திவைக்கப்படும் அல்லது ரத்து செய்யப்படும். இதுகுறித்து செய்தித் தாள்களிலும் தொலைக்காட்சிகளிலும் விளம்பரம் செய்யப்படும்’’.
இவ்வாறு யுஜிசி தெரிவித்துள்ளது.
கூடுதல் தகவல்களை அறிய: https://www.ugc.gov.in/pdfnews/9408061_Public-notice-Fee-Nivaran.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதையும் வாசிக்கலாம்: இந்த சான்றிதழ் அளிக்க கட்டணம் வசூலிக்கக்கூடாது; அரசு, தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவு