வேலைவாய்ப்புகளைக் குவிக்கும் பிஎஸ்சி தரவு அறிவியல் படிப்பு; ஐஐடியில் கல்விக் கடனுடன் படிப்பது எப்படி?
ஐஐடி சென்னையில் கல்விக் கடனுடன் பிஎஸ்சி தரவு அறிவியல் படிப்பைப் படிக்கலாம். ஓராண்டில் வெளியேறினாலும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஐடி சென்னையில் கல்விக் கடனுடன் பிஎஸ்சி தரவு அறிவியல் படிப்பைப் படிக்கலாம். ஓராண்டில் வெளியேறினாலும் சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் இளங்கலை தரவு அறிவியல் பட்டப்படிப்பு திட்டம் சென்னை ஐஐடியால் தொடங்கப்பட்டது. இதில் பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (டிப்ளமோ) முடித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பித்து நான்கு ஆண்டு பட்டப்படிப்பு பயிலலாம். செப்டம்பர் 2022 ஆம் ஆண்டிற்கான வகுப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்தில் சேர்ந்து படிப்பதற்கு ஐ.ஐ.டி, மெட்ராஸ் மூலம் நடத்தப்படும் நுழைவுத் தேர்வில் (JEE) பங்கு பெறத் தேவையில்லை. அதற்கு பதிலாக பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு முடித்த மாணவர்களுக்கு ஐ.ஐ.டி, மெட்ராஸ் மற்றும் தாட்கோ மூலம் அளிக்கப்படும் 4 வார பயிற்சியின் முடிவில் வரும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதுமானது. இத்திட்டத்தில் பயில அறிவியல், மனிதவியல் , வணிகவியல் போன்ற அனைத்து பாடப்பிரிவு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தின் ஒவ்வொரு நிலையின் முடிவிலும் வெளியேறும் வழிகள் உள்ளன. மேலும் மாணவர்கள் ஒரு அடிப்படைச் சான்றிதழ், ஒன்று அல்லது இரண்டு டிப்ளமோக்கள், அல்லது பட்டப்படிப்புடன் வெளியேறலாம். இத்திட்டத்தில் வகுப்புகள் இணையதளம் வழியாகவே நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் தேர்வுகள் நேரில் நடத்தப்படுகின்றன.
மாணவர்கள் ஒரே நேரத்தில் தங்களது விருப்ப பட்டப்படிப்பினை (Degree Course)படித்துக் கொண்டே ஐ.ஐ.டி, மெட்ராஸ் வழங்கும் Bachelor of Science in Data Science & Applications பட்டப்படிப்பையும் பயிலலாம். தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் 12,500 க்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் 11 மில்லியனுக்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் இத்துறையில் உள்ளன.
முறையாக 4 வருடம் Bachelor of Science in Data Science & Applications படித்து முடிக்கும் மாணவர்களுக்கு ஐ.ஐ.டி, மெட்ராஸ்-ல் நேரடியாகப் படிப்பதற்கான Gate Exam எழுதுவதற்கான தகுதியாக ஏற்றுக் கொள்ளப்படும்.
இதற்கான தகுதிகள்
பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பு (Diploma) தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களாக இருக்க வேண்டும். மாணவர்கள் தங்களது பன்னிரெண்டாம் வகுப்பு கல்வியில் மொத்த மதிப்பெண்ணில் 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு ஆங்கிலம் மற்றும் கணித பாடத்தில் 60 சதவீதத்துக்கு மேல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். தாட்கோவில் பதிவு செய்த மாணவர்கள் ஐஐடி, மெட்ராஸ் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேர்வு கட்டணம்- ரூ.1500/-
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
பன்னிரெண்டாம் வகுப்பு படித்து முடித்த மாணவர்கள் அனைவரும் ஐ.ஐ.டி,மெட்ராஸ் நடத்தும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான 4 வார பயிற்சியில் கலந்து கொண்டு, அவர்கள் தேர்ச்சி பெற்றால் ஐ.ஐ.டி, மெட்ராஸ் வழங்கும் Bachelor of Science in (Data Science & Applications) பட்டப்படிப்பு சேர்க்கை பெறுவார்கள். மேற்கூறிய பட்டபடிப்பிற்கான செலவினை தாட்கோ கல்விக் கடனாக வழங்கும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி- 21 ஆகஸ்ட் 2022.
தேர்வர்கள் இதற்கு http://tahdco.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
*
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்