மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான்; பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் பங்கேற்கலாம் - முதல் பரிசு ரூ.25 ஆயிரம்
நெடுந்தூர ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் விலையில்லா காட்டன் சர்ட் வழங்கப்படும்.
மதுவுக்கு எதிராக விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளதாகவும் இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மக்கள் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்கலாம் எனவும் விருதுநகர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விருதுநகர் ஆட்சியர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நெடுந்தூர ஓட்டப்போட்டி 03.12.2023 அன்று நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
பள்ளி / கல்லூரி மாணவ / மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்துடன் போதை பொருள்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வரும் 03.12.2023 அன்று காலை 07.00 மணிக்கு நெடுந்தூர ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது. மேற்கண்ட போட்டியினை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைக்க உள்ளார்.
போட்டியில் கலந்துகொள்ளத் தகுதிகள்:
- தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் நேரடியாக பயிலும் 14 வயதிற்கு மேற்பட்ட, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டும் பரிசு பெற தகுதியுடையவர்கள்.
- விழிப்புணர்வு நோக்கில் எவரும் கலந்து கொள்ளலாம்.
- நெடுந்தூர ஓட்டப்போட்டி தூரம் 10 கி.மீ (ஆண்கள்)
- நெடுந்தூர ஓட்டப்போட்டி தூரம் 8 கி.மீ (பெண்கள்)
போட்டி நடைபெறும் வழித்தடங்கள் ( ஆண்களுக்கு)
விருதுநகர், அரசு மருத்துவக் கல்லூரி (தொடக்கம்) - கருப்பசாமி கோவில் – தமிழ்நாடு கிராம வங்கி – பிஎஸ்என்எல் அலுவலகம் – டிஎஸ்பி அலுவலகம் - தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு - திட்ட இயக்குநர் முகாம் அலுவலகம் - மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் - ஐஸ்வர்யா மஹால் (சூலக்கரை) - திரும்புதல் - மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில்-
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் - தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் - கருப்பசாமி கோவில் - விருதுநகர், அரசு மருத்துவக் கல்லூரி (முடிவு)
போட்டி நடைபெறும் வழித்தடங்கள் (பெண்களுக்கு)
விருதுநகர், அரசு மருத்துவக் கல்லூரி(தொடக்கம்) - கருப்பசாமி கோவில் – தமிழ்நாடு கிராம வங்கி - பிஎஸ்என்எல் அலுவலகம் - DSP அலுவலகம் - தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு - திட்ட இயக்குநர் முகாம் அலுவலகம் - மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் - விருதுநகர், அரசு மருத்துவக் கல்லூரி (முடிவு)
பரிசு விபரம்
- முதல் பரிசு - ரூ.25,000
- இரண்டாம் பரிசு - ரூ.15,000
- மூன்றாம் பரிசு - eh. 10,000
- ஆறுதல் பரிசு - 10 மாணவர்கள், 7 மாணவியர்களுக்கு தலா ஐந்தாயிரம் வீதம் - ரூ.50,000
நெடுந்தூர ஓட்டப்போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் விலையில்லா காட்டன் சர்ட் வழங்கப்படும்.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்.
- பள்ளி, கல்லூரியில் வழங்கப்பட்ட அடையாள அட்டை (அல்லது)
- பள்ளி அல்லது கல்லூரி தலைமையால் வழங்கப்பட்ட அங்கீகார சான்று (Bonafied Certificate)
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் தங்களது பெயரினை மின்னஞ்சல் முகவரி acexcisevnr@gmail.com மற்றும் அலைபேசி 97867-66900, 99423-34934, 98423-63699 என்ற வாட்ஸப் எண்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் 03.12.2023 அன்று காலை 05.30 முதல் 07.00 மணி வரையில் நேரடியாகவும் பதிவு செய்துகொள்ளலாம்’’.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.