Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University Outsourcing: இதற்கான சுற்றறிக்கையை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் துறை தலைவர்களுக்கும் நிதித் துறைக்கும் அனுப்பி உள்ளார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் மட்டுமே அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவர் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் அனைவரும் குத்தகை முறையில் நியமிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தனது பழைய அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் திரும்பப் பெற்றுள்ளது. இதற்கான சுற்றறிக்கையை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர், அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் துறை தலைவர்களுக்கும் நிதித் துறைக்கும் அனுப்பி உள்ளார்.
நடந்தது என்ன?
குத்தகை முறையில்தான் உதவிப் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. இந்த அறிவிப்பு காரணமாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் இனிமேல் நிரந்தர உதவிப் பேராசிரியர்களோ, ஊழியர்களோ நியமிக்கப்படாத சூழல் ஏற்பட்டது.
இதனால் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம் இதனால் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர். பாமக தலைவர் அன்புமணி கூறும்போது, ’’சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தேவையான பேராசிரியர்களை தினக்கூலி/ மதிப்பூதியத்தின் அடிப்படையில் குத்தகை முறையில் மட்டும்தான் இனி நியமிக்க வேண்டும் என்று அதன் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
ஆசிரியர் அல்லாத பணிகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த குத்தகை முறை நியமனங்கள் இப்போது ஆசிரியர் பணிக்கும் நீட்டிக்கப்பட்டிருப்பது கேலிக்கூத்து என்பது மட்டுமின்றி, அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையை குழி தோண்டி புதைக்கக்கூடியது’’ என்று விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்கள் மட்டுமே அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவர் என்று பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிண்டிகேட்( நிதிக்குழு) தீர்மானத்தில் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மட்டுமே தொகுப்பூதிய முறையில் நியமிக்கப்படுவார்கள் என்றும் செயல் திட்டங்களுக்குத் தேவைப்பட்டால், தற்காலிக பணியாளர்களை நியமிக்கலாம் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தெரிய வந்தது எப்படி?
அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, பதிவாளர் அனைத்து கல்லூரிகளின் முதல்வர்கள், மையங்களின் இயக்குநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!