6ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி: மத்திய அரசு அதிரடி திட்டம்!
செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் அறிவு சார்ந்து அதிகரிக்கும் தேவைகளைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு நாட்டின் பாடத்திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளது.
நாடு முழுவதும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வியை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகின்றது.
எங்கும் ஏஐ.. எதிலும் ஏஐ..!
நம்மை வியக்க வைப்பதில் விஞ்ஞான உலகம் எப்போதும் தயங்கியதில்லை. புதிய, புதிய கண்டுபிடிப்புகளால் தினம், தினம் ஆச்சரியத்தில் ஆழ்ந்து வருகிறோம். நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத வேலைகளை செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) செய்து வருகிறது.
கடந்த சில மாதங்களாகவே AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான விவாதம் பல மடங்கு அதிகரித்துள்ளது. திரைப்படங்களில் தொடங்கி, அலுவலகத்தில் விடுப்பு விண்ணப்பம் எழுதுவது வரையிலும் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு விரிவடைய தொடங்கியுள்ளது. பயனாளர்களின் எதிர்பார்ப்புகளை உள்ளீடாக தந்துவிட்டால், அதற்கேற்ற துல்லியமான முடிவுகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழங்கி வருகிறது. ஒருதரப்பினர் இதற்கு ஏகோபித்த வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்புகளையும் பதிவு செய்து வருகின்றனர்.
நாட்டின் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் அறிவு சார்ந்து அதிகரிக்கும் தேவைகளைக் கருத்தில்கொண்டு, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நாட்டின் பாடத்திட்டத்தில், செயற்கை நுண்ணறிவு பாடங்களை அறிமுகம் செய்ய உள்ளது. பள்ளி அளவில் 62ஆம் வகுப்பில் இருந்து இதற்கான பாடத்திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. NPAI எனப்படும் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய திட்ட திறன் கட்டமைப்பின்கீழ் (National Programme on Artificial Intelligence Skilling Framework) செயற்கை நுண்ணறிவு கல்விக்கான பாடத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
நிபுணர்களுக்கான தேவை அதிகரிப்பு
2024-ல் செயற்கை நுண்ணறிவு மற்றும் தாவு அறிவியல் நிபுணர்களுக்கான தேவை 10 லட்சமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேசிய திட்ட திறன் கட்டமைப்பின்கீழ் பாடத்திட்டம் முறைப்படுத்தப்பட உள்ளது.
அதே நேரத்தில் கல்வியில் நல்லொழுக்க நெறிமுறைகளின் முக்கியத்துவத்தையும் அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது. பாடத்திட்டத்தில் குறைந்தட்சம் 10 சதவீத அளவுக்காவது எத்திக்கல் எனப்படும் நெறிமுறை சார்ந்த அம்சங்கள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணுகுமுறை ஏஐ அமைப்புகளின் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் தனியுரிமை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளது.
நாட்டின் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி
இதற்கிடையில், செயற்கை நுண்ணறிவின் மூலம் மாணவர்கள் மத்தியில் கல்வியை கொண்டு சேர்க்கும் வகையில் கேரளாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செயல்படக்கூடிய பள்ளி அண்மையில் திறக்கப்பட்டது. இந்தியாவிலேயே இதுதான் முதல் செயற்கை நுண்ணறிவு பள்ளி ஆகும். சாந்திகிரி வித்யாபவன் எனும் இந்தப் பள்ளியை முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார். அமெரிக்காவின் iLearning Engines (ILE) நிறுவனம், Vedhik eSchool ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் விளைவாக இந்த பள்ளி உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.