CUET UG Results: தொடர் சர்ச்சையில் என்டிஏ; க்யூட் தேர்வு முடிவுகள் திட்டமிட்ட தேதியில் வெளியாகுமா?
CUET UG Results 2024: 2024ஆம் ஆண்டுக்கான க்யூட் இளநிலைத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நாடு முழுவதும் முக்கிய நுழைவுத் தேர்வுகளை நடத்தி வருகிறது. நீட், யுஜிசி நெட் தேர்வு, சிஎஸ்ஐஆர் நெட் ஆகிய தேர்வுகளை தேசியத் தேர்வுகள் முகமையே நடத்தி, தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது.
நீட் இளநிலைத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம், தாள் கசிவு, மோசடி, முறைகேடுகள் கண்டறியப்பட்டன. கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் சர்ச்சை எழுந்தது. இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை தொடங்கியது.
முதலில் நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததை தேசியத் தேர்வுகள் முகமை மறுத்தது. ஆனால் இதுதொடர்பான விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டனர். பிஹார், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் கைது நடந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் நீட் தேர்வில் முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார்.
இதற்கிடையே நடந்து முடிந்த யுஜிசி நெட் தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டது. அதேபோல சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
க்யூட் இளநிலைத் தேர்வு
நாடு முழுவதும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் கலை, அறிவியல் படிப்பில் சேர நடத்தப்படும் க்யூட் இளநிலைத் தேர்வுகள் மே 15, 16, 17, 18, 21, 22 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இரு முறைகளிலும் அதாவது கணினி வழியிலும் பேனா- காகித முறையிலும் நடைபெற்றது. நாடு முழுவதும் 379 நகரங்களிலும் இந்தியாவுக்கு வெளியே 26 நகரங்களிலும் க்யூட் தேர்வு நடந்தது. 13.48 லட்சம் தேர்வர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. எனினும் இந்த முடிவுகளில் தாமதம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022, 2023-லும் தேர்வு முடிவுகளில் தாமதம்
முன்னதாக தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 2022ஆம் ஆண்டு தேர்வு முடிவுகளில் தாமதமாகின. மணிப்பூர் வன்முறை காரணமாக 2023ஆம் ஆண்டிலும் க்யூட் தேர்வு முடிவுகள் தாமதமாகின.
தேசியத் தேர்வுகள் முகமை தலைவர் நீக்கம்
நுழைவுத் தேர்வுகளில் ஏற்பட்ட குளறுபடிகள் சர்ச்சையானதை அடுத்து, தேசியத் தேர்வுகள் முகமை தலைவர் சுபோத் குமார் அண்மையில் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.