10, 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!
Tamil Nadu 10th, 12th Exam: தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
ஓமிக்ரான் வைரஸ் தொற்று உலகம் முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவிட்டது. இந்தியாவிலும் ஓமிக்ரான் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் இன்றைய நிலவரப்படி (டிச.28) 653 பேருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் (142), மகாராஷ்டிராவில் (141), கேரளாவில் (57), குஜராத்தில் (49), தெலங்கானா (41), தமிழ்நாடு (34), கர்நாடகா (31) மற்றும் ராஜஸ்தானில் (43) பேருக்கு தொற்று உள்ளது. 183 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். அதற்கு முந்தைய கல்வியாண்டில் 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். கொரோனாவால் மாணவர்களின் கல்வி, குறிப்பாக தேர்வு எழுதும் பழக்கம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி இருந்தது.
அதுவும் தற்போது உலகம் முழுவதும் ஓமிக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தக் கேள்வி இன்னும் அதிகரித்துள்ளது.
ஏப்ரல் கடைசி அல்லது மே முதல் வாரம்:
இந்நிலையில் தான், ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பள்ளி பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். ஜனவரி 3-வது வாரத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திருப்புதல் தேர்வு எதற்காக?
மாணவர்களின் கற்றல் திறன் எந்த அளவுக்கு உள்ளது; இந்த கல்வியாண்டில் மீதமுள்ள நான்கு மாதங்களிலும், மாணவர்களுக்கு எந்த வகையில் பாடங்களை நடத்த வேண்டும் என, ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகமும் திட்டமிடும் வகையில் இந்த தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருப்புதல் தேர்வுக்காக மாணவர்களை தயார் படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஓமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருவதால், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் ஆன்லைனில் வகுப்புக்களை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஓமிக்ரான் அச்சுறுத்தலால் டெல்லி, உத்தரப்பிரதேசம், அசாம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் ஓமிக்ரான் தடுப்பு நடவடிக்கை குறித்து டிசம்பர் 31ல் முதல்வர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது.