10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்துக்கு; பெயர்ப்பட்டியலில் திருத்தம் செய்ய இன்றே கடைசி வாய்ப்பு!
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களின் மதிப்பெண் சான்றிதழை சரியாகப் பெறும் வகையில், பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள், தங்களின் மதிப்பெண் சான்றிதழை சரியாகப் பெறும் வகையில், பெயர்ப் பட்டியலில் திருத்தம் செய்ய கடைசி வாய்ப்பு அளிக்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று தெரிவித்துள்ளதாவது:
''பத்தாம் வகுப்பு, மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள, அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பல முறை வாய்ப்பளிக்கப்பட்டது. பெயர்ப் பட்டியல் தயாரிக்க போதுமான கால அவகாசமும், திருத்தங்கள் மேற்கொள்ள பல வாய்ப்புகளும் அளிக்கப்பட்ட நிலையிலும் கூட, சில பள்ளிகளின் பெயர்ப் பட்டியல்களில் திருத்தம் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை என்பது, தேர்வு முடிவு வெளியிட்ட பின்னரும் சில பள்ளிகளிலிருந்து பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி இவ்வலுவலகத்தில் பெறப்படும் கடிதங்கள் வாயிலாக தெரியவருகிறது.
எனவே, தற்போது தேர்வுமுடிவு வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கான தற்காலிக மதிப்பெண் சாதன்றிதழில் தேர்வர்களது (தலைப்பெழுத்து, பெயர் (ஆங்கிலம் / தமிழ்), தாய் மற்றும் தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பயிற்று மொழி (Medium of Instructions) மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு (2) பொதுத் தேர்விற்கான மதிப்பெண் பட்டியலில் தேர்வர்களது தலைப்பெழுத்து, பெயர் (ஆங்கிலம் / தமிழ்), பிறந்த தேதி, புகைப்படம், பயிற்றுமொழி (Medium of Instructions), மொழிப்பாடம் (First Language) ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளவும், பள்ளியின் பெயரில் (ஆங்கிலம் / தமிழ்) திருத்தங்களை மேற்கொள்ளவும் தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இம்மாதிரியாக பலமுறை மாணவர்களது பெயர்ப் பட்டியலில் திருத்தங்கள் வழங்க வாய்ப்பளித்தும், மதிப்பெண் சான்றிதழ் தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட பின்னர் திருத்தம் கோரி கடிதம் பெறப்படுவது ஒரு நிகழ்வாக உள்ளது. இது மாணவர்களுக்கு சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள் இதன் முக்கியத்துவத்தை அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
எனவே, மேற்குறிப்பிட்டுள்ள இனங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டி இருப்பின், தலைமை ஆசிரியர் மாணவரின் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் / மதிப்பெண் பட்டியல் நகலில் உரிய திருத்தங்களை மேற்கொண்டு, சான்றொப்பமிட்டு அதனை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் 12.06.2023 அன்று பிற்பகல் 5.00 மணிக்குள் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தேர்வர்களது நலன் கருதி, பிழைகளற்ற மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுவதற்காக வழங்கப்படும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளாமல் மதிப்பெண் சான்றிதழ் அச்சிட்டு வழங்கப்பட்ட பிறகு, சான்றிதழில் திருத்தம் செய்யக் கோரி அலுவலகத்திற்கு மனுக்கள் அனுப்புதல் கூடாது.
எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் இப்பொருள் குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது''.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்குநர் தெரிவித்துள்ளார்.