பப்ஜி விளையாட்டால் ஏற்பட்ட பகையால் கஞ்சா போதையில் நண்பனை கொன்ற நண்பர்கள்...!
பப்ஜி போட்டி முன்விரோதம், கஞ்சா போதையில் சக நண்பனையே கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்களால் முத்துப்பேட்டை மற்றும் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பப்ஜி விளையாட்டில் முன்விரோத தகராறு. கஞ்சா போதையில் நண்பனை கொலை செய்த நண்பர்கள்..
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த நாச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் நாகூர்பிச்சை. இவரது மகன் இஸ்மத் (22). இவர் டிப்ளமோ படித்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவு மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே ஆள் நடமாட்டமில்லாத பகுதியல் இஸ்மத் காயத்துடன் சாலையோரத்தில் இருந்த கால்வாயில் சடலமாக கிடந்ததை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி டி.எஸ்.பி இளஞ்செழியன் மற்றும் ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் இஸ்மத்தின் உடலை கைப்பற்றி மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசாரனையை தொடங்கினர்.
விசாரனை குறித்து போலீசார் தெரிவிக்கையில் மன்னார்குடியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்த இஸ்மத் கடந்த ஒரு வருடம் முன்பு படிப்பு முடிந்து முத்துபேட்டைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த இவரது நண்பர் வாஜித்திற்கும் (23) இஸ்மத்திற்கும் பப்ஜி விளையாடுவதில் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மன்னார்குடிக்கு சென்று சமாதனம் பேசலாம் என வாஜித், இஸ்மத்தை அழைத்துள்ளார். இதனையடுத்து மன்னார்குடி ஆர்.பி.சிவம் நகர் அருகே உள்ள ஆள் நடமாட்டமில்லாத பகுதிக்கு இஸ்மத், வாஜித் மற்றும் வாஜித் நண்பர்களான நாச்சிகுளம் பகுதியை சேர்ந்த தீன்ஹனீஸ், மர்ரூஜ், அக்பர்பாஷா ஆகியோரும் வந்துள்ளனர்.

அப்போது இஸ்மத் மற்றும் வாஜித்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் வாஜித் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து இஸ்மத்தை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது. கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும் போலீசார் விசாரனை செய்து வந்தனர். மேலும் தப்பி சென்ற நாச்சிகுளத்தை சேர்ந்த வாஜித், தீன்ஹனீஸ், மர்ரூஜ், அக்பர்பாஷா ஆகியோரை போலீசார் தேடி வந்தனர். கொலை சம்பவம் குறித்த அறிந்ததும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சம்பவ இடத்திற்கு செய்தார் நேரில் விசாரனை செய்தார். மேலும் குற்றவாளிகை விரைந்து பிடிக்க தனிப்படை அமைத்து உத்திரவிட்டார்.

விரைந்து செயல்பட்ட தனிப்படையினர் மன்னார்குடியில் பதுங்கியிருந்த நான்கு கொலையாளிகளையும் ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது மது மற்றும் கஞ்சா போதையில் தவறு செய்துவிட்டதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.

பப்ஜி விளையாட்டில் போட்டி முன்விரோதம் கஞ்சா போதையில் சக நண்பனையே கத்தியால் குத்தி கொலை செய்த நண்பர்களால் முத்துப்பேட்டை மற்றும் மன்னார்குடி பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.





















