Crime: தன்பாலின ஈர்ப்பால் வந்த வினை? திருமணத்திற்காக நண்பரை கொன்றுவிட்டு பயத்தில் இளைஞர் தற்கொலை!
கடந்த ஜனவரி 8 ஆம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்ற லோகேஷ், வாஞ்சிநாதன் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர்.
சென்னையில் நண்பரை கொன்றுவிட்டு இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.எம்.காலனியைச் சேர்ந்தவர் லோகேஷ். இவர் பழைய மாமல்லப்புரம் சாலையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இதே நிறுவனத்தில் அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்ற நபரும் வேலை பார்த்து வந்துள்ளார்.இதனிடையே கடந்த ஜனவரி 8 ஆம் தேதி வழக்கம்போல வேலைக்கு சென்ற லோகேஷ், வாஞ்சிநாதன் இருவரும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் செல்போனை தொடர்புக் கொண்டபோது அது சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது.
இதனால் லோகேஷின் பெற்றோர் அமைந்தகரை போலீசிலும், வாஞ்சிநாதன் பெற்றோர் அம்பத்தூர் போலீசிலும் புகார் கொடுத்தனர். இதன்பேரில் 2 காவல் நிலைய போலீசாரும் வழக்குப்பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் காலை வாஞ்சிநாதன் தனது சகோதரி காமாட்சிக்கு, தான் தற்கொலை செய்துக் கொள்ளப்போவதாக வாட்ஸ்அப்பில் தகவல் அனுப்பினார். அதன் பின்னர் அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது. வாட்ஸ்அப் தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்த காமாட்சி இதுபற்றி அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக வாஞ்சிநாதன் செல்போன் சிக்னலை வைத்து போலீசார் சோதனை செய்தனர். அந்த சிக்னல் முகப்பேர் பன்னீர் நகரில் இருக்கும் ஒரு விடுதியை காட்டியது.
அங்கு சென்ற போலீசார் வாஞ்சிநாதன் தங்கியிருந்த அறைக்கதவை தட்டியுள்ளனர். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் விடுதி ஊழியர்கள் உதவியுடன் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த அறையில் லோகேஷ் தரையில் பிணமாக கிடந்தார். அவருக்கு அருகில் வாஞ்சிநாதன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பாட்டார். இதனைக் கண்டு போலீசார், விடுதி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நொளம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதுதொடர்பாக போலீசார் தரப்பில் வெளியாகியுள்ள தகவலின்படி, “ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த லோகேஷ் மற்றும் வாஞ்சிநாதன் இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், இருவருக்கும் தன்பாலின ஈர்ப்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே வாஞ்சிநாதனுக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். ஆனால் லோகேஷ், தன் பாலின ஈர்ப்பு உறவுக்கு அழைத்ததால் தனது திருமண வாழ்க்கை பாதிக்கப்படலாம் என நினைத்த வாஞ்சிநாதன், அவரை கொலை செய்ய நினைத்துள்ளார். அந்த வகையில் ஜனவரி 8 ஆம் தேதி விடுதி அறைக்கு அழைத்து லோகேஷை ஷூ லேஸ் கயிற்றைக் கொண்டு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் வாஞ்சிநாதன்.பின் தனது சகோதரிக்கு தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்திருக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.