Watch Video: 'வருவார்.. அலேக்காக தக்காளி பெட்டியை தூக்குவார்' சேலத்தை அலறவைத்த தக்காளி திருடன்!
கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போனதும், இதனால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதும் தெரியவந்தது.
தக்காளி பெட்டி..
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை நகராட்சி அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் சங்கர் (வயது 26). இவர் பெருமாகவுண்டம்பட்டி, சஞ்சீவிராய பெருமாள் கோயில் அருகே காய் கறி கடை வைத்துள்ளார். இவருக்கு தினமும் காலை தக்காளி பார்சல் இறக்குபவர்கள். கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை அதிகாலையில் 50 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டி வழக்கம் போல இறக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் கடை உரிமையாளர் சங்கர் காலையில் கடையைத் திறக்க வந்த போது ஒரு கிரேடு தக்காளி பெட்டி மட்டுமே வெளியே இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து தக்காளி இறக்கியவரிடம் கேட்டபோது இரண்டு பெட்டி இறக்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பார்த்தபோது ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து தக்காளி பெட்டியை திருடிச் சென்றது தெரிய வந்தது.
டிப்டாப் இளைஞர்
வீடியோவில் டிப்டாப் இளைஞர் ஒருவர், ஸ்கூட்டரில் வந்து கடை முன்பு நின்று சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தக்காளியை கிரேடுடன் எடுத்து, ஸ்கூட்டரில் கொண்டு செல்வது பதிவாகியிருந்தது. அந்த சிசிடிவி வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கடை உரிமையாளர் மற்றும் தக்காளி வியாபாரிகள், தக்காளி திருடிய டிப்டாப் இளைஞரின் வீடியோவை வைத்து பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்ததோடு, இதுகுறித்து மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் சங்கர், புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து தக்காளி திருடனை தேடிவந்தனர். இதனிடையே இளம்பிள்ளை, பெருமாகவுண்டம்பட்டி, புதுரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக தக்காளி அதிக அளவில் திருட்டு போனதும், இதனால் சிறு வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்திருப்பதும் தெரியவந்தது. சிசிடிவி காட்சியில் பதிவாகி இருந்த இருசக்கர வாகனத்தின் நம்பரை வைத்து விசாரணை செய்ததில், வெண்ணந்தூர் தங்கசாலை வீதி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்ராஜ் என்பது தெரியவந்தது.
இவர் ஏற்கனவே சேலம் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே வந்த நிலையில், மகுடஞ்சாவடி காவல் நிலைய எல்லைப் பகுதியில் தக்காளி திருட்டில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து தக்காளி திருடிய சின்ராஜை மகுடஞ்சாவடி காவல்துறையினர் கைது செய்து சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். பல்வேறு திருட்டு சம்பவங்களுக்கிடையே இளைஞர் ஒருவர் தக்காளி திருடிய வழக்கில் கைதாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.