விழுப்புரம் : தடுப்பு வேலியில் வேன் மோதி கோர விபத்து... குழந்தை உட்பட 2 பேர் உயிரிழப்பு
விழுப்புரம்: வானூர் அருகே தடுப்பு வேலியில் வேன் மோதி கோர விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
விழுப்புரம்: வானூர் அருகே சாலையோரம் உள்ள தடுப்பு வேலியில் வேன் மோதி கோர விபத்தில் குழந்தை உட்பட 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
புதுச்சேரி மாநிலம் சாரம் பகுதியைச் சேர்ந்த விக்டர் சுரேஷ் (60) என்பவர் தனது குடும்பத்தினருடன் பிரான்ஸ் நாட்டில் வசித்து வரும் நிலையில் தனது மனைவியுடன் இன்று வெளிநாடில் இருந்து தாயகம் திரும்பினார். இந்நிலையில் தாயகம் திரும்பி விக்டர் சுரேஷ் மற்றும் அவரது மனைவி தமிழரசி ஆகியோரை அவரது உறவினர்கள் சென்னை விமான நிலையத்தில் இருந்து வரவேற்று வேன் மூலம் புதுச்சேரிக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர்.
இவர்களது வேன், விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள கிளியனூர் புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி சென்று சாலையோரம் இருந்த இரும்பு தடுப்பு வேலியின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் கிளியனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகள் ஈடுபட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பி விக்டர் சுரேஷ் மற்றும் அவரது உறவினரின் 1 1/2 வயது குழந்தை விநாளி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 8 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் உயிரிழந்த சுரேஷின் மனைவி தமிழரசி உள்ளிட்ட 3 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்ன செய்ய வேண்டும்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்