(Source: ECI/ABP News/ABP Majha)
Crime: ஆரோவில் அருகே நகை கடை சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி - ஏமாந்த திருடர்கள்
மூன்று நபர்களுக்கும் மேற்பட்டோர் நேற்றிரவு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு முயற்சி செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
விழுப்புரம்: ஆரோவில் அருகே நகை கடையின் சுவற்றைத் துளையிட்டு கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகையை கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் புதுச்சேரி லாஸ்பேட்டை முல்லை வீதியை சேர்ந்த செந்தில்குமார் வயது 46. இவர் கடந்த 20 ஆண்டுகளாக திருச்சிற்றம்பலம் கூட்ரோடு காந்தி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி வளாக கட்டிடத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நகை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் நாள்தோறும் வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கடை திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் நகைக்கடையின் பின்பக்க சுவற்றை தொலையிட்டு கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் நகைக்கடை உள்ளே இருந்த பீரோவை உடைக்க முயற்சித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக நகைகள் எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை.
இன்று காலை தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு கோட்டக்குப்பம் துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். கடையின் சுவற்றை ஆயுதங்கள் மூலம் துளையிட்ட மர்ம நபர்கள் கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் கடைக்குள் இருந்த பீரோவை உடைக்க முயற்சி செய்தபோது பீரோ வலிமையாக இருந்ததால் அதனை கொள்ளையர்களால் திறக்க முடியவில்லை. கேஸ் வெல்டிங் மிஷின் மூலம் பீரோவை உடைக்க அவர்கள் முயற்சி செய்திருப்பது பீரோவில் லேசாக துளை இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. மூன்று நபர்களுக்கும் மேற்பட்டோர் நேற்றிரவு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்ற திட்டமிட்டு முயற்சி செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், காவல்துறை தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பல கோடி மதிப்புள்ளான நகைகள் நகை கடை பீரோவில் இருந்ததும் கொள்ளையர்கள் முயற்சி தோல்வி அடைந்ததால் பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்படாமல் தப்பியது.