கர்ணன் பாணியில் போலீசார் மீது தாக்குதல்; சாலை மறியல், போலீஸ் குவிப்பு
சிவகாசி அருகே தங்கள் கிராமத்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மறியலில் ஈடுபட்ட ஒரு தரப்பினர் நடத்திய தாக்குதலில் போலீசார் படுகாயம் அடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வேண்டுராயபுரம். கடந்த சில நாட்களாக ஆடு கோழிகள் உள்ளிட்டவை திருடு போவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் சிவகாசி தாலுகாவிற்கு உட்பட்ட துலுக்கப்பட்டி பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவர் மற்றொரு நண்பருடன் வேண்டுராயபுரம் பகுதியில் பகலில் சுற்றித் இருந்ததாகவும், பின்னர் அதிகாலைப் பொழுதில் அப்பகுதியில் சுற்றித் திரிந்ததால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த சக்தி, சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வழக்கு பதிவு செய்து கைது செய்யகோரியும் சிவகாசி விளாம்பட்டி பிரதான சாலையில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அதை தடுக்க சென்ற பெண் காவலர் தாக்கப்பட்டதில் அவரது மண்டை உடைந்தது. படுகாயம் அடைந்த பெண் காவலர் ரத்தம் சொட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கர்ணன் பட பாணியில் நடந்தை இச்சம்பவத்தை தொடர்ந்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது.