Vikravandi child death: குழந்தையின் இறுதி ஊர்வலம் : கதறி அழுத பெற்றோர்; நெஞ்சை கலங்கடித்த சோகம்
விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவியின் உடல் விக்கிரவாண்டி வராக நதி அருகே உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
விழுப்புரம் : விக்கிரவாண்டி தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த மாணவியின் உடல் விக்கிரவாண்டி வராக நதி அருகே உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்த அரசு ஒப்பந்த ஊழியர் பழனிவேல் என்பவரின் குழந்தை விக்கிரவாண்டி சென்மேரிஸ் தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்தது நேற்று மதியம் அந்த பள்ளியின் உள்ள கழிவுநீர் தொட்டில் விழுந்து உயிரிழந்தது. இன்று காலை குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து அஞ்சலிக்காக அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. வனத்துறை அமைச்சர் பொன்முடி மாவட்ட ஆட்சியர் பழனி விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா ஆகியோர் அரசு சார்பில் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த நிவாரண தொகை 3 லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் குழந்தையின் பெற்றோர் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோமினிக் மேரி, வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்த விக்கிரவாண்டி போலீசார் மூன்று பேரையும் நள்ளிரவில் கைது செய்து உடற் தகுதி சான்று வாங்குவதற்காக முண்டியாம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல்ஸ் மட்டும் சான்றிதழ் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் இருவரும் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து ஆசிரியர் ஏஞ்சல்ஸ் விக்கிரவாண்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி சத்தியநாராயணன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர் அவரை வரும் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வரை நீதிபதி சத்யநாராயணன் நேரில் சென்று விசாரணை செய்து இருவரையும் வரும் பத்தாம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் மேலும் உடல் சீராகும் வரை மருத்துவமனையில் பாதுகாப்பாக சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினார். அதன் பின்னர் சிறைக்கு கொண்டு செல்லவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில் குழந்தையின் இறுதி ஊர்வலம் அவருடைய இல்லத்தில் இருந்து புறப்பட்டது. குழந்தையின் முகத்தைப் பார்த்து பெற்றோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கதறி அழுதனர். தன்னுடன் விளையாடிக் கொண்டிருந்த நண்பர் உயிரிழப்பை தாங்க முடியாமல் சிறுமியின் நண்பர்கள் கதறி அழுத சம்பவம் பார்ப்போரின் நெஞ்சை கலங்கடித்தது. சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அண்ணியூர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். மாணவியின் உடல் வராக நதி அருகில் உள்ள இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.