(Source: ECI/ABP News/ABP Majha)
மயிலாடுதுறையில் மாணவர்கள் இடையே கஞ்சா புழக்கம் எதிரொலி: 3 கடைகளுக்கு சீல்.....இருவர் கைது...!
குத்தாலம் அரசு பள்ளியில் மாணவர்கள் இடையே கஞ்சா புழக்கம் மூன்று ஆண்டுகளாக இருப்பதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் பேசிய வீடியோ வைரலான நிலையில் காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கஞ்சா அடித்து விட்டு சகமாணவனை தாக்கிய மாணவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் பலன் இல்லை என்று பள்ளி தலைமை ஆசிரியர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் விற்பவர்கள் மீதான கடும் நடவடிக்கையை தமிழக காவல்துறை தீவிரப்படுத்தி உள்ளது. 'கஞ்சா ஆபரேசன் 2.O' என்ற பெயரில் அதிரடி வேட்டையை நடத்த தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறையினருக்கும் உத்தரவிட்டிருந்தார்.
அதனை தொடர்ந்து இந்தாண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகம் முழுவதும் கஞ்சா ஆபரேசன் 2.O வை தீவிரப்படுத்தி சோதனையையும், கண்காணிப்பையும் காவல்துறையினர் நடத்தி வருவதோடு, நூற்றுக்காணக்கானோரை கைது செய்தும் அவர்கள் வங்கிகணக்குகள் முடக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை மற்றும் புழக்கத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறி வருகின்றனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கஞ்சா அடித்து விட்டு சகமாணவனை தாக்கிய மாணவர்கள் குறித்து காவல்துறையில் புகார் அளித்தும் பலன் இல்லை என்று பள்ளி தலைமை ஆசிரியர் பேசும் வாட்ஸ் அப் வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சமீபத்தில் 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனை கஞ்சா அடித்த சில மாணவர்கள் தாக்கியுள்ளனர். அதனால் அந்த மாணவன் பள்ளிக்கு செல்லாமல் தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனை ஆசிரியர்களிடம் சொல்ல வேண்டிய தானே என்று மாணவனின் தந்தை கேட்டதற்கு அதை சொன்னாலும் வெளியே வந்த பிறகு மீண்டும் அந்த மாணவர்கள் தன்னை அடிப்பார்கள் என்று தாக்கப்பட்ட பையன் தெரிவித்துள்ளான்.
இது சம்பந்தமாக மாணவனின் தந்தை நேரடியாக பள்ளிக்கு சென்று பள்ளி தலைமை ஆசிரியரிடம் இது குறித்து கேட்கையில், பள்ளியில் 1500 மாணவர்கள் படித்து வருவதாகவும், 1500 பேரும் 1500 தவறுகள் செய்வார்கள் என்றும் அதனை எல்லாம் தங்களால் கண்காணிக்க முடியாது, ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் கூட கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். நாங்கள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளோம் கஞ்சா விற்பனை செய்பவர்களை பிடிப்பதில்லை. இது மூன்று ஆண்டுகளாக நடைபெறும் நிகழ்வு எனவும், ஒரு மாணவனை அவரது பெற்றோரால் கண்காணிப்பது சிரமமாக உள்ள நிலையில், 1500 மாணவர்களை கண்காணிப்பதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளது. பள்ளிக்கு வெளியே கஞ்சா விற்பதை நாங்கள் எப்படி தடுக்க முடியும்? என தலைமை ஆசிரியர் கூறுகிறார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் குறித்து தகவல் கொடுங்கள் என்று மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் பல்வேறு இடங்களில் நோட்டீஸ் ஒட்டி உள்ளார். செய்தியாளர்களிடமும் தனிப்பட்ட முறையில் கஞ்சா விற்கும் நபர்கள் குறித்து தகவல் இருந்தால் கொடுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் கீழ் மட்டத்தில் உள்ள காவல்துறையினர் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இந்த கஞ்சா விற்பனையை கண்டு கொள்ளாமல், தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளது சமூக ஆர்வலர்கள் இடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பள்ளி தலைமையாசிரியர் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து , கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீதும் சட்டத்திற்கு புறம்பாக கடைகளில் குட்கா விற்பனை செய்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ் நிஷா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் நகராட்சி உணவுபாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் அடங்கிய குழுவினர் மயிலாடுதுறை நகரில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் கூறைநாடு பகுதியில் காக்கும் பிள்ளையார் கோவில் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் பாக்கெட்டுகளை விற்பனை செய்த ஜாகீர்உசேன் மற்றும் ஆற்றங்கரை தெருவில் உள்ள குடோனில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்த நடேசன் ஆகிய இருவரை கைது செய்து கடை மற்றும் குடோனிற்கு சீல் வைத்தனர். தொடர்ந்து பெசன்ட் நகரில் உள்ள கடைக்கும் சீல் வைத்து ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து 3 கடைகளுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். இந்த அதிரடி சோதனை அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎஸ்பி வசந்தராஜ் எச்சரித்துள்ளார்.