கன்னியாகுமரியில் இரட்டை கொலை வழக்கு: கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டதால் நடந்த கொடூரம்?
கஞ்சா விற்பனையை தட்டி கேட்டதால் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் இருவரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை செய்துள்ளனர்- கஞ்சா விற்பனையை தட்டி கேட்டதால் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). இவருடைய தாயார் திரேசம்மாள் (90). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்தபோது மர்ம நபர்களால் பயங்கரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். மேலும் 2 பேரும் அணிந்திருந்த 15 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் 2 பெண்களையும் கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து சென்றனர். இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். முக்கியமாக கொலை நடந்த வீட்டில் கிடந்த மங்கி குல்லா, ஒரு ஜோடி செறுப்பு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முட்டம் மற்றும் அம்மாண்டிவிளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்தனர். எனினும் கொலை தொடர்பாக போலீசாருக்கு எந்தத் துப்பும் கிடைக்காமல் இருந்தது.
எனவே கொலையாளிகள் பற்றி ஏதேனும் தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என்றும் போலீசார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து பவுலின்மேரி மற்றும் திரேசம்மாள் கொலை தொடர்பாக முக்கிய ஆதாரம் சிக்கியது. அதன்படி சந்தேகத்தின் அடிப்படையில் 2 வாலிபர்களை போலீசார் பிடித்தனர். ஆனால் பிடிபட்ட இருவரிடமும் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கஞ்சா விவகாரத்தில் இந்த கொலை நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு இந்த கொலை வழக்கில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதே சமயம் கஞ்சா விவகாரத்துக்கும், கொலை செய்யப்பட்ட பவுலின் மேரி மற்றும் திரேசம்மாளுக்கும் என்ன தொடர்பு என்பது சரிவர தெரியவில்லை. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்டதால் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே கொலையில் தொடர்புடைய மேலும் 5 பேரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் பிடிபட்டால் தான் கொலைக்கான முழு தகவலும் தெரியவரும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னியாகுமரியில் கஞ்சா விற்பனை தொடர்பாக இரட்டைக்கொலை அரங்கேறியது. இந்த நிலையில் தற்போது கஞ்சா விவகாரம் தொடர்பாக தாய்- மகள் கொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்