காதலருடன் சேர்ந்து தாயை கொன்ற அமெரிக்கப் பெண் : விடுதலை செய்த இந்தோனேசியா!
இதன்மூலம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றிருந்த அந்தப் பெண் 6 ஆண்டுகளிலேயே தண்டனை முடிந்து தனது நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளார்.
தனது காதலருடன் சேர்ந்து தனது தாயைக் கொன்ற அமெரிக்கப் பெண்ணை அவரது தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்து அனுப்பியுள்ளது இந்தோனேசிய அரசு. இந்தோனேசியாவின் பரபரப்பான சூட்கேஸ் கொலைவழக்கு என அறியப்பட்ட இந்த வழக்கில் இந்தோனேசிய அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. மதம்சார்ந்த நம்பிக்கை உடையவரான அந்தப் பெண் சிறையில் இருந்த காலத்தில் நல்ல செயல்கள் பலவற்றில் ஈடுபட்டதால் அதனைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகள் சிறைதண்டனை பெற்றிருந்த அந்தப் பெண் 6 ஆண்டுகளிலேயே தண்டனை முடிந்து தனது நாட்டுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளார்.
நடந்தது என்ன?
U.S. woman who assisted Bali 'suitcase' murder released from jail https://t.co/mLK6tcLOc3 pic.twitter.com/c7AdWoUGIi
— Reuters (@Reuters) October 29, 2021
2014ல் இந்தோனேசியாவின் பாலித்தீவில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிதர் மேக் என்பவர் தனது தாய் வான் மேக்குடன் ஒரு ஹோட்டல் அறையில் தங்கியுள்ளார்.அப்போது ஹிதரைக் காணவந்த அவரது காதலர் டாமியை அவரைப் பார்க்கக்கூடாது எனச் சொல்லி வான் மேக் தடுத்துள்ளார். டாமியை வான் மேக்குக்குப் பிடிக்காததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் வான் மேக்கை டாமி கத்தியால் குத்திக் கொன்றார். இந்தக் கொலைக்கு ஹிதரும் உடந்தையாக இருந்தார். சம்பவம் நடந்தபோது ஹிதருக்கு வயது 19 டாமிக்கு வயது 21. இறந்த வான் மேக்கின் உடலை வெட்டி சூட்கேஸில் மறைத்து எடுத்துச் சென்றனர் குற்றவாளிகள் இருவரும். ரத்தம் படிந்த சூட்கேஸுடன் கையும் களவுமாகப் பிடிபட்ட ஹீதர் மற்றும் டாமியின் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு இருவரும் பாலி சிறையில் அடைக்கப்பட்டனர். டாமிக்கு 18 ஆண்டுகள் சிறையும் ஹீதருக்கு 10 ஆண்டுகள் சிறையும் தண்டனையாக வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. இதனை அடுத்து 2015ல் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.சிறையில் அடைக்கப்பட்ட ஒருவருடத்தில் ஹிதர் மற்றும் டாமி இருவருக்கும் ஸ்டெல்லா என்கிற மகள் பிறந்தாள்.
இதற்கிடையேதான் தற்போது தண்டனைக்காலம் நிறைவடையாத நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த ஹிதர் தண்டனைக்காலம் குறைக்கப்பட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட இருக்கிறார். ஹிதர் வழக்கிலிருந்து விடுதலையாவது பெரும் சர்ச்சையைத் தற்போது ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசிய அரசின் சட்டத்தின்படி சிறையில் இருந்து வெளியேறும் ஹிதர் 6 வயதாகும் தனது மகளுடன் தற்போது குடும்பமாகச் சேர்ந்து வாழ உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.