மயிலாடுதுறை : கள்ளச்சாராயத்தால் கண்பார்வை இழந்து இருவர் உயிரிழப்பு
மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த இருவர் கண்பார்வை இழந்து உயிரிழந்துள்ளார்கள். மேலும் இருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த இருவர் கண்பார்வை இழந்து உயிரிழந்தார்கள். மேலும் இருவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக தமிழக முழுவதும் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் பால், உணவகங்கள், மருந்தகங்கள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்து திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அரசு மதுபான கடையான டாஸ்மாக் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மதுவிற்கு அடிமையான மது பிரியர்கள், மது போதைக்கு மது கிடைக்காமல் தங்களை போதையில் வைத்துக்கொள்ள பல்வேறு மாற்று வழிகளை தேடி வருகின்றனர். இதனை பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் பல இடங்களில் கள்ளச்சாராயம் தயார் செய்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மது போதைக்கு அடிமையான சிலர் பெயிண்டில் கலக்கப்படும் தின்னர் என்ற வேதிப்பொருளில் எலுமிச்சைப்பழத்தை பிழிந்து குடித்து உயிர் இழந்தனர்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள், கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டவர்கள் என பல கள்ளச்சாராய கும்பலை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையினர் ஆங்காங்கே கைது செய்யும் சம்பவங்களும் நடந்தேறி வருகிறது. இருப்பினும் காவல்துறை கண்களில் மண்ணைத் தூவும் விதமாக கள்ளச்சாராய விற்பனை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்கதையாக நடந்து வருகிறது. அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருகே சேந்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் என்பவரின் மகன் அச்சக தொழிலாளி பிரபு (33) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அம்மாசி மகன் லோடுமேன் செல்வம் (36) வீராசாமி (52) சரத்குமார் (28) உள்ளிட்ட 4 பேர் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ள சாராயத்தை வாங்கி குடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்தில் பிரபுவுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது இதனையடுத்து பிரபுவை அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதேபோன்று அவருடன் மது அருந்திய
செல்வமும் கண்பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு முன்பாகவே வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். இதைத்தொடர்ந்து வீராசாமி மற்றும் சரத்குமார் உள்ளிட்ட 2 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மயிலாடுதுறை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
சாராயம் குடித்து இருவர் உயிரிழந்ததுடன் மேலும் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு குறைந்திருந்த நிலையில் தற்போது ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி காவல்துறையின் கெடுபிடியையும் மீறி ஆங்காங்கே ஊறல் மற்றும் எரிசாராயம் தயாரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் விற்பனை செய்யப்படுவது கள்ளச்சாராய விற்பனையை காவல்துறையினர் பணம் பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருக்கின்றனரா? என்ற கேள்வியை பொதுமக்கள் எழுப்புகின்றனர்.