சோகம்! மணிப்பூரில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை - நள்ளிரவில் நடந்தது என்ன?
மணிப்பூரில் குக்கி இனக்குழுவினர் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதியில் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் எல்லை பகுதிகளில் எப்போதும் பாதுகாப்பு வீரர்கள் 24 மணி நேர தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தீவிரவாதிகள், நக்சலைட்கள் ஆகியோர் நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
திடீர் தாக்குதல்:
சமீபகாலமாக வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாட்டவர்கள் மற்றும் தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுப்பதற்காக கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் அமைந்துள்ளது பிஷ்ணுபூர் மாவட்டம். இங்கு சி.ஆர்.பி.எப். வீரர்கள் பாதுகாப்பு முகாம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், வழக்கம்போல வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் முகாம் இருந்த பகுதியின் அருகே இருந்த மலையில் இருந்து குக்கி இனக்குழுவினர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
2 பேர் உயிரிழப்பு:
இதையடுத்து, பதிலுக்கு சி.ஆர்.பி.எப். வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கிய இந்த துப்பாக்கிச்சூடு அதிகாலை 2.15 மணி வரை நடைபெற்றது. இந்த தாக்குதலின்போது, குக்கி இனக்குழுவினர் வெடிகுண்டுகளையும் வீசினர். இதில், சி.ஆர்.பி.எப். வீரர்களின் 128வது பட்டாலியன் மீது வீசப்பட்ட குண்டு வெடித்தது.
அவர்கள் நடத்திய இந்த திடீர் தாக்குதலில் சி.ஆர்.பி.எப். படையைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். சி.ஆர்.பி.எப்.யைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் என் சர்கார் மற்றும் தலைமை காவலர் அரூப்சைனி ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வீர மரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு அவர்களது உடல் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்பட உள்ளது. மேலும், இந்த தாக்குதலில் இரண்டு சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அச்சத்தில் மக்கள்:
மணிப்பூர் உள்பட வடகிழக்கு மாநிலங்களிலும், சில வட மாநிலங்களிலும் பல்வேறு இனக்குழுக்கள் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சிலர் அமைதி வழியில் போராடி வரும் சூழலில், சிலர் ஆயுதம் ஏந்தி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே மணிப்பூரில் கடந்த ஓராண்டு காலமாகவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தற்போது நடைபெற்றுள்ள இந்த தாக்குதல் அப்பகுதியில் வசிப்பவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், இந்த தருணத்தில் எல்லையில் பாதுகாப்பை அதிகாரிகள் பலப்படுத்தி வருகின்றனர். மேலும், நாட்டின் சந்தேகத்திற்குரிய பகுதிகளிலும் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: அச்சச்சோ! வாம்பயர் ஃபேஷியல் செய்த பெண்களுக்கு எச்.ஐ.வி: அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்
மேலும் படிக்க: Morning Headlines: 88 தொகுதிகள் - 61% வாக்குப்பதிவு.. காவல் நிலையத்தில் பிரதமர் மீது புகார்.. முக்கியச் செய்திகள்..