மதுரை : ஆண்களை கண்டாலே பிடிக்கல... சட்டக் கல்லூரி மாணவிகள் தற்கொலைக்கு முயன்றது ஏன்?
பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள் அதன்பின் பின் சட்டக்கல்லுாரியில் சேர முடிவு செய்தனர். இவர்களில் ஒருவருக்கு திருச்சியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலியிலும் இடம் கிடைத்துள்ளது.
மதுரையில் மாணவிகள் இருவர் தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதான இருமாணவிகள் சிறுவயதில் இருந்தே நண்பர்களாக இருந்துள்ளனர். பள்ளிப் பருவத்தில் இருந்தே ஒன்றாக இருந்த இவர்கள் அதன்பின் பின் சட்டக்கல்லுாரியில் சேர முடிவு செய்தனர். இவர்களில் ஒருவருக்கு திருச்சியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலியிலும் இடம் கிடைத்துள்ளது. இவர்கள் இருவரும் விடுமுறை நாட்களில் சந்திப்பதையும், செல்போனில் அடிக்கடி பேசுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
இதனிடையே திருநெல்வேலியில் படிக்கும் மாணவிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதில் விருப்பமில்லாத அம்மாணவி திருச்சியில் படிக்கும் மாணவிக்கு தகவலை தெரிவித்துள்ளார். இதனையடுத்து இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். அதன்படி மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள லாட்ஜில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு அறை எடுத்து தங்கியுள்ளனர். கல்லூரி அடையாள அட்டையை காட்டினால் எளிதாக அறை தந்து விடுவார்கள் என்ற முடிவில் இவர்கள் இங்கு தங்கியுள்ளனர்.
இந்த இருவரில் ஒரு மாணவி தன்னுடைய சகோதரிக்கு போன் செய்து மதுரையில் உள்ள தகவலை தெரிவித்துள்ளார். இதனிடையே நேற்று காலை அந்த சகோதரி காலை போன் செய்தபோது நீண்ட நேரமாக யாரும் அழைப்பை எடுக்கவில்லை. இதனையடுத்து சம்பந்தப்பட்ட லாட்ஜிற்கு போன் செய்து அப்பெண் விவரம் கூறியுள்ளார்.இதனையடுத்து ஊழியர்கள் அம்மாணவிகள் தங்கியிருந்த அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர்.
நீண்ட நேரமாக கதவை யாரும் திறக்காததால் அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இருவரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர். உடனடியாக அவர்களை மீட்ட போலீசார் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஒரு மாணவியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாணவிகள் தங்கியிருந்த அறையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் இவ்வுலகில் ஆண்களை எங்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களுடன் எல்லாம் எங்களால் சேர்ந்து வாழ முடியாது. திருமணம் என்ற பெயரில் எங்களை பெற்றோர்கள் பிரிக்க நினைக்கிறார்கள். அதனால் தற்கொலை முயற்சியை எடுக்கிறோம். எங்களை ஒரே குழியில் அடக்கம் செய்யுங்கள் என தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்