வெளியூரில் திருடன்... உள்ளூரில் தலைவன்... விலங்கை உடைத்து விடுவிக்கப்பட்ட ரீல் KGF கைது!
மனைவி ஊராட்சி மன்ற தலைவர், கணவரோ வெளியூர் திருடன். வெளியில் ஒரு முகமும், உள்ளே வேறு முகமுமாய் வாழ்ந்து வந்த கணேசன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு கிராமத்தின் ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டு வருபவர் சுவேதா. இவரது கணவர் கணேசன். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டிசம்பர் 6-ம் தேதி அன்று, டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க கணேசனும் அவரது மனைவியும் வந்த போது திடீரென அங்கு காரில் வந்த கோவை குற்றப்பிரிவு காவல் துறையினர், கடந்த அக்டோபர் மாதம் கோவை குனியமுத்தூர் பகுதியில் நடைபெற்ற திருட்டு வழக்கு ஒன்றில் கணேசனுக்கு தொடர்பு இருப்பதாக கைது செய்ய முயன்றனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த கணேசனின் ஆதரவாளர்களுக்கும் கோவை குற்றப்பிரிவு காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கணேசனின் கையில் காவலர்கள் மாட்டிய விலங்கை கணேசனின் ஆதரவாளர்கள் அருகாமையில் உள்ள வெல்டிங் கடைக்கு இழுத்துச் சென்று இயந்திரம் மூலமாக கைவிலங்கை துண்டித்தனர். மேலும் காவல் துறையினரின் பிடியில் இருந்து கணேசனை பாதுகாத்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த கோவை காவலர்கள் ஆம்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிய நிலையில். கணேசனை கைது செய்ய வந்த காவல்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி குனியமுத்தூர் குற்றப்பிரிவு மற்றும் தனிப்படை காவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் உமராபாத் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். துத்திபட்டு ஊராட்சி மன்ற தலைவரும் கணேசனின் மனைவியுமான சுவேதா உட்பட 17 பேர் மீது வழக்கு பதிவு செய்து அதில் 10 பேரை கடந்த 6 ஆம் தேதி இரவு கைது செய்து, தலைமறைவாக உள்ளவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் காவல் துறையினரை தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் கணேசன் ஆம்பூர் அருகே வனப்பகுதியில் பதுங்கி உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் ஆம்பூர் அருகே உள்ள மலை அடிவாரப் பகுதியில் பதுங்கியிருந்த கணேசனை கைது செய்து ஆம்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதார். இதைத் தொடர்ந்து அவர் ஆம்பூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் சுவேதா உட்பட 6 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் கைது செய்யப்பட்டுள்ள கணேசன் மீது ஏற்கனவே கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, சென்னை உட்பட பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தகவல் அளித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியூரில் திருடனாகவும், உள்ளூரில் அரசியல் வாதியாகவும் வலம் வந்த கணேசன் கைதானதை பார்த்த கிராம மக்கள் வாயடைத்து போய் நின்றனர்.