ஆபாச வீடியோ புகார்: மணப்பாறையில் ஒருவர் வீட்டில் சிபிஐ சோதனை
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே ஆபாச வீடியோ தொடர்பான புகாரில் சிபிஐ அதிகாரிகள் ராஜாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பூமாலைப்பட்டியில் ராஜா என்பவரிடம் டெல்லி சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆபாச வீடியோ தொடர்பான புகாரில் சிபிஐ அதிகாரிகள் ராஜாவிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆன்லைன் மூலம் குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுவது, பார்ப்பது, பரப்புவது போன்ற குற்றங்களுக்கு தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000-ன் 67B பிரிவின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றது. சிபிஐ மூலமாக பெறப்படும் இன்டர்போல் பட்டியலில் உள்ள குழந்தைகள் ஆபாச படங்களை வெளியிடும் இணையதளங்களை, மத்திய அரசு அவ்வப்போது தடை செய்து வருகிறது. மேலும் இணையளத்தை பயன்படுத்தும் போது டிஜிட்டல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் விழிப்புணர்வை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஏற்படுத்தி வருகிறது. இந்த பாதுகாப்பு விழிப்புணர்வுத் தகவல்களை https://www.infosecawareness.in என்ற பிரத்தியேக இணையதளம் வழங்குகிறது என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் தொடர்பான ஆபாசப்படங்களை ஆன்லைனில் பரப்புவதற்கு எதிராக மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ கடந்த செப்டம்பர் மாத இறுதியில் நாடு முழுவதும் பெரிய அளவிலான சோதனை ஒன்றில் ஈடுபட்டது. ஆபரேஷன் மேக்-சக்ரா என்ற பெயரில் 20 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 56 இடங்களில் நடத்தப்பட்டது. சமூக வலைதளங்களில் குழந்தைகளை வைத்து உருவாக்கப்படும் ஆபாச வீடியோக்கள், படங்களை பகிரும், மைனர்களை மிரட்டும் தனிநபர், குழுக்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் விதமாக ஆபரேஷன் மேக்- சக்ரா என்ற மிகப்பெரிய சோதனை நடத்தப்பட்டது. சிபிஐயின் இந்த நடவடிக்கை இண்டர்போல் போலீஸாரின் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சமூக ஊடகத்தின் பல்வேறு தளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை வெளியிட்ட, பரிமாறிய நபர் குறித்த தகவல் சிங்கப்பூர் இண்டர்போல் அதிகாரிகள் வழியாக சிபிஐக்கு கிடைத்தது. முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், "ஆபரேஷன் கார்பன்" என்ற பெயரில் இதுபோன்ற ஒரு சோதனையை சிபிஐ நடத்தியது. நாடுமுழுவதும் 76 இடங்களில், 83 நபர்களிடம் நடத்தப்பட்ட அந்த சோதனையில் பலர் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல் கடந்த செப்டம்பர் மாதத்தில், குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்களை புழக்கத்தில் விடுபவர்கள் குறித்த வழக்குகளை கண்காணிப்பது தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சர்வதேச இண்டர்போலில் சிபிஐயும் ஒரு அங்கத்தினராக இருக்கிறது. சர்வதேச அளவில் குழந்தைகள் பாலியல் சுரண்டல் படங்கள், வீடியோ பற்றிய தகவல்களைக் கொண்ட இந்த அமைப்பின் மூலம் குழந்தை பாலியல் சுரண்டல் பற்றிய தகவல்களை உறுப்பு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்ள முடியும். மேலும் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை, சைபர் ஆபாச படங்கள், குழந்தைகளின் ஆபாச படங்களை வெளியிடுபவர்கள் மீது மாநிலங்கள் வாரியாக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே இன்று திருச்சி மாவட்டம் மணப்பாறையில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ராஜா என்பவரின் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். சிபிஐ விசாரணைக்கு ஆளாகியுள்ள ராஜா கடந்த 10 ஆண்டு காலமாக லண்டனில் பணியாற்றி விட்டு தற்போது திருப்பூரில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது