யாருப்பா நீ... எப்படிய்யா கொண்டு வந்தே: திருச்சி ஏர்போர்ட் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொண்டு வரப்பட்ட 55 பல்லி மற்றும் ஓணான் வகைகளை பறிமுதல் செய்ததுடன் அதனை கடத்தி வந்தது எப்படி என சுங்கத்துறை அதிகாரிகள் அந்த ஆண் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூர்: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த ஆண் பயணியை சோதனை செய்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியது காரணம் என்ன தெரியுங்களா? 55 வெளிநாட்டு வனவிலங்குகளை அவர் கடத்தி வந்ததுதான்.
திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம், தோஹா, கத்தார் உட்பட முக்கிய நாடுகளுக்கும் சென்னை, மும்பை, ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கும் தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது
சர்வதேச நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவதும் இதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திற்கு மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் வந்தடைந்தது..
விமான நிலையத்தில் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகள் உடமைகளை வழக்கம் போல் சோதனை செய்தனர். அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்த ஆண் பயணியின் நடவடிக்கைகள் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடன் அவரிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார். இதையடுத்து சந்தேகம் வலுவடைந்த நிலையில் அந்த ஆண் பயணியின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் நுணுக்கமாக சோதனை செய்தனர்.
அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அந்த ஆண்பயணி தனது உடமையில் மறைத்து வெளிநாட்டு வனவிலங்கு இனங்களை கடத்தி வந்ததுதான். தொடர்ந்து அதிகாரிகள் அந்த உயிரினங்களை பறிமுதல் செய்தனர்.
இதில் பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து கொண்டு வரப்பட்ட 55 பல்லி மற்றும் ஓணான் வகைகளை பறிமுதல் செய்ததுடன் அதனை கடத்தி வந்தது எப்படி என சுங்கத்துறை அதிகாரிகள் அந்த ஆண் பயணியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்கு இனங்களை வனத்துறையிடம் ஒப்படைக்க உள்ளனர்.
சமீபகாலமாக திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் வெளிநாட்டு கரன்சிகள் பறவைகள், பாம்புகள் உயிரினங்கள் கடத்தி வரும் சட்ட விரோதமான செயல்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் வருகிறது.. சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான சோதனையில் ஈடுபட்டாலும் பயணிகள் "குருவி" என்ற போர்வையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டு வரும் சம்பவம் வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது...
ஆகவே கடத்தலில் ஈடுபட்டு பிடிபடுபவரகள் மீது வருங்காலத்தில் விமான நிலைய வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தங்கம் கடத்தி வந்தவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
தகுந்த கண்காணிப்பு, முன்னேற்பாடுகள் என்று இருந்தாலும் வெளிநாட்டில் இருந்து கடத்தி வருபவர்கள் திருச்சி ஏர்போர்ட்டில் அதிகாரிகளிடம் சிக்குவது தொடர்ந்து நடந்து வருகிறது. வெளிநாடுகளில் பல்வேறு சோதனைகளை கடந்து எப்படி கடத்தி வருகின்றனர் என்பதும் புரியாத புதிராக உள்ளது. இருப்பினும் திருச்சியில் சுங்கத்துறை அதிகாரிகள் மிகுந்த விழிப்புடன் இதுபோன்ற சமூக விரோதிகளை தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.