Crime: திண்டிவனத்தில் சோகம்; காணாமல் போன பள்ளி மாணவன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு
திண்டிவனம் அருகே காணாமல் போன பள்ளி மாணவன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்: திண்டிவனம் அருகே காணாமல் போன பள்ளி மாணவன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டான். இதுதொடர்பாக பிரம்மதேசம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ்அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல் என்பவரது மகன் கிரி (13). இவர் பிரம்மதேசம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை அதே பகுதியில் உள்ள கிரஷரில் வேலை செய்து வருகிறார். தாய் மாலாவும் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் தனியாக இருந்த கிரி திடீரென காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் கிராமம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் நேற்று மாலை பிரம்மதேசம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சிறுவனை தேடி வந்த நிலையில் இன்று காலை அதேகிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் அடையாளம் தெரியாத சிறுவன் சடலம் மிதப்பதாக பிரம்மதேசம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பிரம்மதேசம் காவல் ஆய்வாளர் அன்பரசு தலைமையிலான போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது காணாமல் போன கிரி என்பது தெரிய வந்தது. இதனையடுத்து சிறுவனின் பிரேதத்தை உடற்கூறாய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன சிறுவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Join Us on Telegram: https://t.me/abpnaduofficial
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்