Crime | வீட்டை இடிக்க வந்தவர்களைத் தடுத்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் எரிப்பு.. பீகாரில் பயங்கரம்!
பீகார் மாநிலத்தின் தார்பங்காவில் தங்கள் வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்க வந்த மர்ம நபர்களைத் தடுக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நெருப்பில் கொளுத்தப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலத்தின் தார்பங்கா மாவட்டத்தில் தங்கள் வீட்டை புல்டோசர் கொண்டு இடிக்க வந்த மர்ம நபர்களைத் தடுக்க முயன்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நெருப்பில் கொளுத்தப்பட்டுள்ளதாக அப்பகுதி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
31 வயதான சஞ்சய் ஜா, 36 வயதான பிங்கி, 20 வயதான நிக்கி குமாரி ஆகிய மூவரும் இந்தச் சம்பவத்தில் நெருப்பில் கொளுத்தப்பட்டுள்ளனர். உடலில் ஏற்பட்ட தீக்காயங்களில் இருந்து மீண்ட நிக்கி குமாரி தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில், சஞ்சய் ஜா, பிங்கி ஆகியோர் தார்பங்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுள் பிங்கி 8 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
தார்பங்கா மாவட்டத்தின் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் அஷோக் பிரசாத் இதுகுறித்து கூறிய போது, வழக்கின் தொடக்க விசாரணையின் மூலம் இது சொத்து தகராறால் நிகழ்ந்த பிரச்னை எனக் குறிப்பிட்டுள்ளார். `அந்த வீட்டை மற்றொரு குழுவினர் தங்கள் சொத்து எனக் கூறி, அதனைக் கைப்பற்ற நினைத்துள்ளனர். இது கைகலப்பாக மாறி, தொடர்ந்து மூவர் தீக்காயங்களால் பாதிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது’ என அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அஷோக் பிரசாத், `காவல்துறையினர் அப்பகுதியின் சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்து வருகின்றனர். விரைவில் குற்றத்தில் ஈடுபட்டவர்களின் அடையாளம் கண்டறியப்படும். முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் தெரிவித்துள்ளார்.
தப்பிப் பிழைத்துள்ள நிக்கி, பாதுகாப்புக்காக காவல்துறையினரிடம் தான் முன்வைத்த கோரிக்கைகளைக் காவல்துறையினர் கவனிக்கவில்லை எனக் குற்றம் சாட்டியிருப்பதோடு, சிவ குமார் ஜா என்பவர் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் எனவும் கூறியுள்ளார்.
`என் அண்ணன் சஞ்சய், 8 மாதக் கர்ப்பிணியான எனது அக்கா பிங்கி ஆகிய இருவரும் 80 சதவிகித தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடி வருவதால், பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். எங்கள் சொத்தை சட்டவிரோதமாக சொந்தம் கொண்டாடும் சிவ குமார் ஜா என்பவரிடம் இருந்து எங்களுக்கு நேர்ந்துள்ள அபாயத்தில் இருந்து எங்களைப் பாதுகாக்க தார்பங்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளரைக் கடந்த ஜனவரி 10 அன்று சந்திப்பதற்காக அவரது அலுவலகம் சென்றோம். அவர் எங்களைச் சந்திக்காமல், என் அக்காவுடன் ஃபோனில் பேசி, வேண்டியதை நிறைவேற்றுவதாக உறுதி அளித்துள்ளார்’ என நிக்கி தெரிவித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளாக அவரது குடும்பம் அதே வீட்டில் வசித்து வருவதாகக் கூறியுள்ள நிக்கி தொடர்ந்து, `கடந்த 2017ஆம் ஆண்டு எங்கள் வீட்டை சட்டவிரோதமாக சிவ குமார் ஜா என்பவர் வாங்கியிருப்பதாக அறிந்தோம். இந்த வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பாட்னா உயர்நீதிமன்றத்தில் உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு, வருவாய்த்துறை ஆணையர் இந்த விவகாரத்தில் தடை உத்தரவு விதித்திருந்தார்’ எனக் கூறியுள்ளார்.