ஈரோடு: லாட்டரியால் பணத்தை இழந்த நூல் வியாபாரி தற்கொலை - திமுக கவுன்சிலரின் கணவர் மீது புகார்
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுகவை சேர்ந்த செந்தில் குமார் என்ற லாட்டரி ஏஜன்ட்டிடம் லாட்டரி வாங்கி இதுவரை 62 லட்ச ரூபாயை தான் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். 54 வயதான இவர் நூல் வியாபாரம் செய்து வந்தார். இவர் லாட்டரி வாங்கும் பழக்கம் உள்ளதால் தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஒரு நம்பர் லாட்டரி சீட்டில் செலவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு ராதாகிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முன்பு ராதாகிருஷ்ணன் தற்கொலைக்கான காரணம் குறித்த வீடியோ பதிவு செய்து வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ளார்.
அதில் ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த திமுகவை சேர்ந்த செந்தில் குமார் என்ற லாட்டரி ஏஜன்ட்டிடம் லாட்டரி வாங்கி இதுவரை 62 லட்ச ரூபாயை தான் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட வேதனையிலும் உயிருடன் இருந்தால் மேலும் அடிமையாகி விடுவேன் என்பதால் தற்கொலை செய்து கொள்வதாகவும், அனைவரும் மன்னித்து விடும்படியும் வீடியோவில் தெரிவித்து இருந்தார். மேலும் இழந்த பணத்திலிருந்து லாட்டரி ஏஜென்டிடம் குடும்பத்திற்கு நஷ்ட ஈடாக பணத்தை பெற்று தருமாறு தனது கடைசி ஆசை எனக் கூறியிருந்தார். இதனிடையே ராதாகிருஷ்ணன் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக ராதாகிருஷ்ணனின் மனைவி மாலதி அளித்த புகாரின் பேரில், ஈரோடு வடக்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருங்கல்பாளையம் லாட்டரி ஏஜென்ட் செந்தில்குமார் திமுகவைச் சேர்ந்தவர் என்பதும், இவரது மனைவி கீதாஞ்சலி ஈரோடு மாநகராட்சி 39 வது வார்டு கவுன்சிலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காவல் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராதாகிருஷ்ணன் முன்பு தறிப்பட்டறை நடத்தி வந்த நிலையில், அத்தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் நூல் கமிஷன் ஏஜெண்டாக இருந்ததும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தினால் பண நெருக்கடி இருந்து வந்ததும் தெரியவந்தது. தனது வாட்ஸ் ஆப் வீடியோ பதிவில் கூறியது போல 62 இலட்ச ரூபாய் பணத்தை எந்த காலகட்டத்தில், எவ்வாறு இழந்தார் என்பதற்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் புலன் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் சாட்சிகளை விசாரணை செய்தும் ஆதாரங்களை சேகரித்தும் அடுத்த கட்ட புலன் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை தடைசெய்யப்பட்ட மற்றும் ஆன்லைன் லாட்டரி விற்பனை தொடர்பாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 215 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். வலைதளம் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் மேற்கொள்ளப்படும் லாட்டரி விற்பனையை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஈரோடு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.