Delhi: OYO மூலம் புக் செய்த ஓட்டல்: பணத்தை திருப்பி கேட்ட நபர்களுக்கு துப்பாக்கி காட்டி மிரட்டல்! - நடந்தது என்ன?
டெல்லி பிலாஸ்பூரில் உள்ள OYO செயலி மூலம் புக் செய்து ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு நண்பர்கள் கரண்ட் கட்டானதால் பணத்தைத் திரும்பக் கேட்டதற்காக ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி பிலாஸ்பூரில் உள்ள OYO செயலி மூலம் புக் செய்து ஹோட்டலில் தங்கியிருந்த இரண்டு நண்பர்கள் கரண்ட் கட்டானதால் பணத்தைத் திரும்பக் கேட்டதற்காக ஊழியர்களால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சந்தீப் குமார் மற்றும் விகாஸ் அளித்த புகாரின்படி, டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள 'ஹேப்பி ஸ்டே ஓயோ ஹோட்டலில்' பிப்ரவரி 11ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில், “சம்பவத்தன்று இருவரும் இரவு 9 மணி அளவில் ஹோட்டலில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அதன்பின்னர் இரவு 11.30 மணியளவில் மின் தடை ஏற்பட்டது. நள்ளிரவு 1 மணி வரை மின்சாரம் வராததால், ஹோட்டல் ஊழியர்களை அணுகிய குமார், காலை வரை மின்சாரம் இருக்காது” என கூறியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "எனவே, எங்கள் பணத்தை திருப்பித் தருமாறு நாங்கள் கோரினோம், அதைத் தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டது, ஊழியர்கள் எங்களைத் தாக்கி எங்கள் அறையில் அடைத்து வைத்தனர்," என்று அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அந்த புகாரில், "பின்னர், சோனு, மோனு மற்றும் ராகுல் ஆகிய மூன்று ஊழியர்கள் எங்களை துப்பாக்கி முனையில் வலுக்கட்டாயமாக ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு அழைத்துச் சென்று மீண்டும் மிகக் கடுமையாக அடித்தனர். பின்னர் நடந்த சம்பவத்தை யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டி அதன் பின்னர் அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர்" என்றும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.
புகாரைத் தொடர்ந்து, பிரிவு 148 (கொடிய ஆயுதங்களுடன் ஆயுதம் ஏந்தியவர்), பிரிவு 149 (சட்டவிரோதமாக கூட்டம்), பிரிவு 323 (காயத்தை ஏற்படுத்துதல்), பிரிவு 342 (தவறான சிறைவாசம்), பிரிவு 365 (கடத்தல்), மற்றும் பிரிவு 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. திங்களன்று (பிப்ரவரி 13) பிலாஸ்பூர் காவல் நிலையத்தில் தண்டனைச் சட்டம் மற்றும் ஆயுதச் சட்டத்தின் பிரிவுகள் 25, 54, 59ன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் போலீஸார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, "குற்றம் சாட்டப்பட்டவர்களை நாங்கள் அடையாளம் கண்டுவிட்டோம், ஆனால் அவர்கள் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்" என்று பிலாஸ்பூர் காவல் நிலைய அதிகாரி ராகுல் தேவ் கூறி உள்ளார்.
ஹோட்டலில் அறை எடுத்து தங்கி, மின்சாரம் இல்லாததால் பணத்தினை திருப்பி கேட்டதற்கு சராமாரியாக தாக்கி துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ள சம்பவம் தலைநகர் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.