Crime: போலீஸை வெட்டிய போலீஸ்; அதிர்ந்த தூத்துக்குடி காவல்துறை - நடந்தது என்ன..?
தூத்துக்குடியில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த காவலருக்கு வெட்டு, காவலர் ஒருவர் காவலரை வெட்டியது என்பது பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வரும் நிலையில் தூத்துக்குடியில் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த காவலருக்கு வெட்டு, காவலர் ஒருவர் காவலரே வெட்டியது என்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி அருகே உள்ள முடிவைத்தானேந்தல் ஓடைத் தெருவை சேர்ந்தவர் முத்துக்குமரன்(வயது 30). இவர் வடபாகம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் சிவன் மகளான காளீஸ்வரிக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. காளீசுவரி 6 மாதம் கர்ப்பினியாக உள்ளார். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நேற்று மாலையில் முத்துக்குமரன் குடிபோதையில் வந்து உள்ளார். முத்துக்குமரன் மற்றும் 2 பேர் தனது மனைவியின் வீட்டுக்கு சென்று தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனை காளீசுவரியின் உறவினர்களாக தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவில் ஏட்டாக பணியாற்றி வரும் கணபதி சுப்பிரமணியன்(48), காவலாளியாக பணியாற்றி வரும் பெரியவிநாயகம்(41) ஆகியோர் சத்தம் போட்டு உள்ளனர். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த முத்துக்குமரன் மற்றும் 2 பேர் சேர்ந்து கணபதி சுப்பிரமணியன், பெரியவிநாயகம் ஆகிய 2 பேரையும் அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்று விட்டனர்.
இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் காவலர் மற்றும் பாதுகாவலரை வெட்டிய தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய காவலர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில் அதே முடிவைத்தானேந்தல் கிராமம் மேல தெருவில் வசிப்பவர் இசக்கிமுத்து மகன் சுரேஷ் பாபு (27). இவர் மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தவர் கடந்த வாரம் முடிவைத்தானேந்தல் கிராமத்தில் நடந்த ஒரு திருமண வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் இவரது பிரேஸ்லெட் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.இவர் பக்கத்து வீட்டை சேர்ந்த பேச்சிமுத்து மகன் ராஜா (22) என்பவர் தான் திருடி இருப்பார் என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று ராஜாவிடம் சுரேஷ்பாபு ப்ரேஸ்லெட் சம்பந்தமாக கேட்டாராம். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் சுரேஷ்பாபு புதுக்கோட்டை காவல்நிலத்தில் புகார் செய்வதற்காக வந்தாராம். அங்கு புதுக்கோட்டை காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசியிடம் புகார் மனுவை கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த ராஜா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுரேஷ்பாபுவை சரமாரியாக வெட்டினாராம். காவல் நிலையத்திற்குள் நடந்த இந்த சம்பவத்தை பார்த்த சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அவரை சுற்றிவளைத்து ராஜாவை கைது செய்தனர். பின்னர் உடனடியாக படுகாயம் அடைந்த சுரேஷ்பாபுவை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.