Thiruvarur: தங்கை முறை சிறுமியை திருமணம் செய்ய ஆசை.. குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டல்! இளைஞர் கைது!
குற்றவாளியான மோகன்ராஜை ஒரு வாரத்திற்குப் பிறகு நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் தங்கை முறையுள்ள சிறுமி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி திருமணம் செய்து கொள்ள வற்புறுத்திய குற்றத்திற்காக போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார்
தமிழகம் முழுவதும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் ஆபாச படங்கள் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது, கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடந்த வண்ணம் இருக்கின்றன. இதுபோன்ற சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு போக்சோ போன்ற கடுமையான சட்டங்கள் மூலம் காவல்துறையினர் தொடர்ந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக சிறுமிகள் பாதிக்கப்படும்போது 1098 என்ற தொலைபேசி எண் மூலம் குழந்தை உதவி மையத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்கிற பல்வேறு முன்னேற்பாடுகளை அரசு செய்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் அண்ணன் முறை உள்ள இளைஞர் ஒருவர் சிறுமி குளிக்கும்போது வீடியோ எடுத்து மிரட்டி வந்த சம்பவம் என்பது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் 17 வயது சிறுமி தனது தாயுடன் வசித்து வருகிறார். சிறுமிக்கு தூரத்து சொந்தமான மோகன் ராஜ் என்பவர் அடிக்கடி சிறுமி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அவர் சிறுமிக்கு அண்ணன் முறை வேண்டும் என்பதால் சிறுமி வீட்டில் உள்ள யாரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த நிலையில் சிறுமி குளிப்பதை அவருக்கு தெரியாமல் மோகன்ராஜ் தனது செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்பட்டது. வீடியோ எடுத்ததுடன் அல்லாமல் அதை சிறுமியிடம் காட்டி அவரை மிரட்டி வந்துள்ளார்.மேலும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து விடுவேன் என்று கூறி சிறுமியை மிரட்டி வந்ததாகவும் தெரிகிறது.மோகன்ராஜ் சிறுமியை மிரட்டியது மட்டுமல்லாமல் தன்னை திருமணம் செய்துகொள்ள வேண்டும் எனவும் சிறுமியை வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில் மோகன்ராஜின் தந்தை தாய் மற்றும் தம்பி ஆகியோர் சிறுமியை அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.இதனால் மனமுடைந்த சிறுமி அரளி விதையை அரைத்து குடித்து கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி தற்கொலைக்கு முன்றார் .இதனையடுத்து மயங்கி விழுந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து சிறுமியின் தாயார் நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி புகார் அளித்திருந்தார்.இந்த புகாரின் அடிப்படையில் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததுடன்,மோகன்ராஜின் தந்தை தனிக்கொடி,தாய் சாந்தி,தம்பி பாக்கியராஜ் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான நால்வரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்ட மோகன்ராஜை ஒரு வாரத்திற்குப் பிறகு நன்னிலம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும் தலைமறைவாக உள்ள அவரது குடும்பத்தினரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.