திருவாரூரில் கொடூர கொலை.. கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரின் தலையை துண்டித்த மர்ம நபர்கள்!
நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் இருசக்கர வாகனங்கள், கடைகளை கற்களால் அடித்து நொறுக்கினர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆத்திரத்தில் அவரது ஆதரவாளர்கள் இருசக்கர வாகனங்கள் கடைகளை கற்களால் அடித்து நொறுக்கினர்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதி கிராமத்தைச் சேர்ந்தவர் நடேச.தமிழார்வன். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நீடாமங்கலம் பகுதி ஒன்றிய செயலாளராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வருகிறார். இவருக்கு செங்கல் சூளை, விவசாயம் போன்ற தொழில்கள் உள்ளன. மேலும் பழனிவேல் என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஸ்டாலின் பாரதி என்ற ஒரு மகளும் உள்ளனர். நடேச தமிழார்வனின் மகள் ஸ்டாலின் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். நடேச தமிழார்வன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் நீடாமங்கலம் பகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளராக பொறுப்பேற்ற போது பல்வேறு அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் தொடர்பாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடினார் என்ற வழக்கும் உள்ளது. அதே போல அடிதடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற வழக்குகளும் நடேச தமிழார்வன் மீதும் உள்ளன.
இந்த நிலையில் இன்று மாலை சரியாக 5 மணி அளவில் நீடாமங்கலம் ரயில்வே கேட் அருகில் உள்ள பெரியார் சிலை அமைந்துள்ள இடத்தில் நின்றுகொண்டிருந்த நடேச தமிழார்வனை இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. அதனைத்தொடர்ந்து நடேச.தமிழார்வன் சரிந்து கீழே விழ அவரது தலையை மர்மகும்பல் துண்டித்து எடுத்துள்ளது. அங்கிருந்து தப்பித்து ஓடிய மர்ம கும்பலை பிடிக்க முயன்ற சிலர் மீதும் மர்ம கும்பல் தாக்கியதால் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த தகவலை அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரும், நடேச.தமிழார்வன் உறவினர்களும், ஆதரவாளர்களும் நீடாமங்கலம் கடைவீதியில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர். அதேபோல அனைத்து கடைகளுக்கும் கற்களை வீசி தாக்குதலை ஏற்படுத்தினர். மேலும் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நீடாமங்கலம் காவல்துறையினர் விரைந்து வந்து உடலைக் கைப்பற்ற முயற்சித்தபோது நடேச.தமிழார்வன் உடலை தர முடியாது எனவும், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நீடாமங்கலம் கடைவீதியில் நடேச.தமிழார்வனு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்தார். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தமிழார்வன் உடலை கைப்பற்றிய போலீசார் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருந்தபோதிலும் தொடர்ந்து தமிழார்வனின் ஆதரவாளர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீடாமங்கலம் கடைவீதி முழுவதும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டப்பகலில் நீடாமங்கலம் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.