திருவண்ணாமலை: மகேந்திரா ஹோம் பைனான்ஸில் தீ விபத்து; அனைத்து ஆவணங்களும் தீயில் கருகியது
திருவண்ணாமலையில் உள்ள மகேந்திரா ஹோம் பைனான்ஸில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பைனான்ஸில் அடமானம் வைக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் தீயில் கருகியது.
இந்தியா முழுவதும் வீடு கட்டும் கடன் வழங்கும் திட்டங்கள் கொண்ட நிறுவனங்களில் மகேந்திரா நிதி நிறுவனம் முன்னணியில் இருந்து வருகிறது. 2007 துவங்கப்பட்ட இந்த கம்பெனிக்கு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் கிளைகள் செயல்பட்டு வருகிறது. 50 ஆயிரம் கிராமங்களில் 6 லட்சம் பேருக்கு 5500 கோடி ரூபாய்க்கு மேல் இந்த நிறுவனம் கடன்களை வழங்கி வருகின்றது. இந்நிலையில் திருவண்ணாமலை சின்ன கடை தெருவில் உள்ள இந்தியன் வங்கியின் மேல் மாடியில் இயங்கி வரும் மகேந்திரா வீடு கடன் வழங்கும் கிளை இயங்கி வருகிறது. இந்த கடன் வழங்கும் மகேந்திரா கம்பெனியில் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு புதிய வீடு கட்டவும், புதிய வீடு வாங்கவும், புதிய வீட்டை விரிவாக்கம் செய்யவும், வீட்டை விரிவாக்கம் செய்யவும் இந்த மகேந்திரா கிளை பைனான்ஸில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த மகேந்திரா பைனான்ஸ் கிளையில் ஏராளமானா பொதுமக்கள் அவர்கள் கட்டும் புதிய வீட்டிற்கு இந்த வீட்டு கட்டும் கடன் வழங்கக்கூடிய பைனான்ஸில் தங்களுடைய வீட்டு பத்திரங்களை அடமானமாக வைத்து கடன்களை பெற்றிருக்கின்றனர். நேற்று இரவு வழக்கம்போல் நிறுவனத்தை மூடி விட்டு மேலாளர் மணிகண்டன் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை 8.30 மணியளவில் மகேந்திரா வீடு கடன் வழங்கும் நிறுவனத்திலிருந்து புகை வந்துள்ளது. அப்போது பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம், பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து பைனான்ஸ் நிறுவனத்தில் திறந்திருந்த ஜன்னல் வழியாக தண்ணீரை பீச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் மற்ற பகுதிகளுக்கும், கீழ்தளத்தில் இருந்த இந்தியன் வங்கிக்கும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் மகேந்திரா ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்த ஆவணங்கள், பத்திரங்கள் ஆகியவை அனைத்தும் தீயில் கருகி சாம்பலாயின. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கம்ப்யூட்டர், மேசை, நாற்காலிகளும் தீயில் சேதமடைந்தன. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து திருவண்ணாமலை நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்