தென்காசி : நம்பிக்கை வைத்த உரிமையாளர்.. திட்டம்தீட்டி மாட்டிக்கொண்ட தொழிலாளர்கள்.. என்ன நடந்தது?
”இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் செல்வம், ஜோதி ரமேஷ், செல்வத்தின் தாய் சித்ரா, கிருஷ்ணசாமி, தன்ராஜ், சபாபதி, வன்னியராஜா & திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட செய்யது அலி ஆகிய 8 பேரை கைது செய்தனர்”
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் முத்தையா. இவர் சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கமிஷன் கடை நடத்தி வருகிறார். குறிப்பாக மிளகாய் வத்தல், பருத்தி, கடலை உள்ளிட்ட விவசாய பொருட்களை தரம் பிரித்து ஏற்றுமதி செய்து வருகிறார். முத்தையாவிடம் சங்கரன்கோவில் திருவிக தெருவை சேர்ந்த செல்வம் (28) மற்றும் தெற்கு ரத வீதியை சேர்ந்த ஜோதி ரமேஷ் (25) என்ற இருவர் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தரம் பிரிக்கப்பட்ட விவசாயப் பொருட்களை மதுரைக்கு கொண்டு சென்று சேர்த்து விட்டு அங்கிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு சங்கரன்கோவில் வந்து முத்தையாவிடம் ஒப்படைப்பது வழக்கம்.
நாளடைவில் முத்தையாவின் நம்பிக்கையை பெற்ற இருவரும் ஏற்றுமதி செய்துவிட்டு லட்சக்கணக்கில் பணத்தை கொண்டு வருவது வாடிக்கையாக இருந்து உள்ளது. இந்த சூழலில் செல்வம் மற்றும் ஜோதி ரமேஷ் ஆகிய இருவரும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் மதுரையில் பொருட்களை இறக்குமதி செய்துவிட்டு கையில் 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் சங்கரன்கோவிலுக்கு திரும்பி உள்ளனர். அப்போது வரும் வழியில் வழிப்பறி கொள்ளையர்களால் பணம் பறிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கடை உரிமையாளர் முத்தையாவிடம் தகவல் தெரிவித்து உள்ளனர். அதிர்ச்சியடைந்த முத்தையா இது குறித்து சங்கரன்கோவில் காவல்துறை துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் ரகசியமாக தனிப்படை அமைத்த டிஎஸ்பி சுதிர் தீவிர விசாரணையும் மேற்கொண்டார். அப்போது விசாரணையில் பணம் வழிப்பறி கொள்ளையர்களால் பறிக்கப்பட்டதற்கான எந்த தகவலும் முறையாக இல்லாத நிலையில் இது குறித்து செல்வம் மற்றும் ஜோதி ரமேஷிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர், விசாரணையில் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்த இருவரும் பின்னர் மாட்டிக் கொண்டனர்.
பின்னர் காவல்துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் அவர்கள் கூறியதாவது, பொருட்களை இறக்குமதி செய்து விட்டு அந்த தொகையை கடை உரிமையாளரிடம் ஒப்படைப்போம், அப்போது சங்கரன்கோவிலை சேர்ந்த செய்யது அலி (38) என்பவருடன் தங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அவர் கமிஷன் கடையின் கலெக்சன் பணத்தை உரிமையாளரிடம் கொடுக்காமல் அதனை கொள்ளையடிக்க தங்களுக்கு திட்டம் தீட்டி கொடுத்ததாக தெரிவித்தனர். அதன் படி இரண்டு தினங்களுக்கு முன்னர் மதுரைக்குச் சென்று பொருட்களை இறக்குமதி செய்துவிட்டு 18 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை சங்கரன்கோவில் எடுத்து வந்த நிலையில் கலெக்சன் பணத்தை வழிப்பறி கொள்ளையர்களிடம் பறிகொடுத்ததாக தெரிவித்ததாக கூறியுள்ளனர்.
மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட கமிசன் கடை ஊழியர்கள் செல்வம், ஜோதி ரமேஷ், செல்வத்தின் தாய் சித்ரா மேலும் கிருஷ்ணசாமி, தன்ராஜ், சபாபதி, வன்னிய ராஜா மற்றும் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட செய்யது அலி ஆகிய 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 15,45,920 ரூபாயை தனிப்படையினர் மீட்டனர். நீண்ட நாட்களாக கடையில் நம்பிக்கையாக பணிபுரிந்த இருவர் இது போன்ற வழிப்பறி நாடகமாடி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் சங்கரன்கோவில் நகர் பகுதியிலும், கமிசன் கடை வட்டாரத்திலும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.