திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் நடந்த கொடூரம்.. தந்தையை வெட்டியதால் மனமுடைந்த மகன் எடுத்த முடிவு
தனது தந்தையை வெட்டிய சிறிது நேரத்தில் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் ஒரு அறைக்கு சென்று அங்கிருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தஞ்சாவூர்: திருமணம் செய்து வைக்காத ஆத்திரத்தில் தந்தையை அரிவாளால் வெட்டிய தீயணைப்பு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தஞ்சை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே மேலப்புனவாசல் பகுதியை சேர்ந்தவர் சேகர் (55). இவரது மனைவி செந்தமிழ்ச்செல்வி. இவர்களுக்கு விக்னேஷ் (29), ராஜேஷ்குமார் (25), மூர்த்தி (23) ஆகிய மகன்கள் உள்ளனர்.
இவர்களில் விக்னேஷ் திருவையாறு தீயணைப்பு நிலையத்தில், தீயணைப்பு வீரராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சமீபகாலமாக விக்னேஷ் தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வையுங்கள் என்று அடிக்கடி தெரிவித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சேகர் எவ்வித பதிலும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதுகுறித்து தந்தை, மகன் இருவர் மத்தியிலும் தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் திருமணம் செய்து வைக்காத தனது தந்தை சேகர் மீது ஆத்திரமடைந்த விக்னேஷ் நேற்று இரவு அவரை அரிவாளால் பின் கழுத்து பகுதியில் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சேகர் அலறி துடித்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் சேகரை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சேகர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையில் தனது தந்தையை வெட்டிய சிறிது நேரத்தில் மனமுடைந்த விக்னேஷ் வீட்டில் ஒரு அறைக்கு சென்று அங்கிருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரது அலறல் சத்தம் அறையின் கதவை உடைத்த உறவினர்கள் விக்னேஷை மீட்டு, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை விக்னேஷ் இறந்தார்.
இதுகுறித்து மருவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.