தஞ்சையில் பயங்கரம்; பட்டப்பகலில் சட்டக்கல்லூரி மாணவருக்கு விழுந்த வெட்டு - தெறித்து ஓடிய மக்கள்
ஹரிஹரனுக்கு முதுகில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அங்கு நின்றவர்கள் அச்சத்தில் தலை தெறிக்க ஓடினர்.
தஞ்சாவூர்: தஞ்சையின் மைய பகுதியாக விளங்கும் காந்திஜி ரோடு ஆற்றுப்பாலம் பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போடுவதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினர் மோதிக் கொண்டனர். இதில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்த மோதல் சம்பவ சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெட்ரோல் போடுவதில் ஏற்பட்ட வாக்குவாதம்
தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. அதில் இன்று காலை பாலாஜி என்கிற பாலசுப்பிரமணியம் (50) என்பவர் பெட்ரோல் போடுவதற்காக வந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஜெயராணி என்பவருக்கும் பாலசுப்ரமணியனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
கணவரை அழைத்த பெட்ரோல் பங்க் பெண் ஊழியர்
இதில் இருவர் மத்தியிலும் வாக்குவாதம் அதிகரிக்க ஜெயராணி தனது கணவரை செல்போனில் பேசி தன்னிடம் ஒருவர் தகராறு செய்வதாக தெரிவித்துள்ளார். இதேபோல் பாலசுப்பிரமணியம் தனது மகன் சட்ட கல்லூரி மாணவரான ஹரிஹரன் (24) போன் செய்து அழைத்துள்ளார். இதையடுத்து ஜெயராணியின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். இதேபோல் ஹரிஹரன், அவரது அத்தை மகன் கார்த்திக் மற்றும் நண்பர்களும் அந்த பெட்ரோல் பங்கிற்கு வந்துள்ளனர். இருதரப்பும் பேசிக் கொண்டிருக்கும் போது, ஹரிஹரன் அந்த பெண் ஊழியரின் கணவரை தாக்கியுள்ளார்.
சட்டக்கல்லூரி மாணவருக்கு அரிவாள் வெட்டு
இதனால் ஆத்திரமடைந்த அவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை எடுத்து ஹரிஹரன் மற்றும் அவரது அத்தை மகன் கார்த்திக் (25) ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ஹரிஹரனுக்கு முதுகில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை பார்த்து அங்கு நின்றவர்கள் அச்சத்தில் தலை தெறிக்க ஓடினர். இதையடுத்து ஜெயராணியின் கணவர் மற்றும் அவருடன் வந்த 5க்கும் அதிகமானோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதையடுத்து காயமடைந்த ஹரிஹரன் மற்றும் கார்த்திக் இருவரும் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த தஞ்சை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டப்பகலில் வாலிபரை அரிவாளால் வெட்டும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.