தஞ்சையில் கொள்ளையடித்து கோவையில் சொகுசு விடுதியில் பதுங்கல் - 3 பேரை தட்டித் தூக்கிய போலீஸ்
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசார் அங்கு விரைந்து சென்று சொகுசு விடுதியில், தங்கி கொள்ளையர்கள் 3 பேரையும் வளைத்து பிடித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் நகை, பணத்தை கொள்ளையடித்து சொகுசு ஓட்டலில் தங்கியிருந்து கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தஞ்சாவூரில் ஹோட்டல் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த 3 பேர் போலீசாரிடம் வசமாக சிக்கினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ரெஜினா நகரில் கடந்த ஜூலை 4 ம் தேதி ஹோட்டல் உரியமையாளர் ஜெயக்குமார் (49), என்பவரது வீட்டில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 50 பவுன் நகை, ரூ.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தஞ்சை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மருத்துவக்கல்லூரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும்
இந்த சம்பவத்தில் சைபர் க்ரைம் போலீஸார் உதவியோடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர். அப்போது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் கோயமுத்தூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி போலீசார் அங்கு விரைந்து சென்று சொகுசு விடுதியில், தங்கி கொள்ளையர்கள் 3 பேரையும் வளைத்து பிடித்தனர்.
பின்னர் அந்த 3 பேரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டியைச் சேர்ந்த ச.சுகுமார் (28), குலைக்கால் தெரு செ.அமர்நாத் (24), மானாமதுரை செக்கடி தெரு பூ.சங்கர் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து நகை மற்றும் ரொக்கத்தை மீட்டனர்.
போலீஸார் விசாரணையில், இவர்கள் மூவரும் காரில் சென்று பகல் நேரத்தில் பூட்டிய வீட்டுகளை நோட்டம் விட்ட பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்துள்ளனர். இவர்கள் மீது தஞ்சாவூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ஈரோடு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் தென்னரசு, தலைமை காவலர்கள் கோதண்டபாணி, திருக்குமரன், அருள்மொழிவர்மன் உள்ளிட்ட போலீஸாரை மாவட்ட எஸ்.பி., ராஜாராம் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.





















