Thanjavur Student Suicide: தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் : வீடியோவை பதிவு செய்தவர் டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணை
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரத்தில் வைரலான வீடியோவை பதிவு செய்த முத்துவேல் மற்றும் மாணவியின் பெற்றோர்கள் டி.எஸ்.பி. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.
தஞ்சையில் 12-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாணவியின் தந்தையான முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோர் இன்று இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான தஞ்சை, வல்லம் டி.எஸ்.பி. பிருந்தாவன் முன்பு ஆஜராகியுள்ளனர். மேலும், அவர்களுடன் மாணவி பேசியதாக வைரலான வீடியோவை பதிவு செய்த முத்துவேல் என்பவரும் ஆஜராகியுள்ளார். இவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
முன்னதாக, தஞ்சை, திருக்காட்டுப்பள்ளியில் உள்ள மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் படித்து வந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி உயிரிழப்பதற்கு முன்பாக மதம்மாறச் சொல்லி வற்புறுத்தியதாக பேசும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது, மாணவியின் பெற்றோர்கள் தொடுத்த வழக்கின் அடிப்படையில், வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், வீடியோவை பதிவு செய்த விசாரணை அதிகாரியிடம் செல்போனையும் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து நேற்று தஞ்சை நீதிமன்றத்தில் மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் சித்தி சரண்யா ஆகியோர் நேரில் ஆஜராகினர். இதையடுத்து, இன்று விசாரணை அதிகாரியான வல்லம் டி.எஸ்.பி. முன்பு இன்று ஆஜராகியுள்ளனர். இவர்களிடம் டி.எஸ்.பி. பிருந்தாவன் விசாரணை மேற்கொள்ள உள்ளார். அந்த செல்போன் சென்னையில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பப்பட உள்ளது. அங்கு செல்போனில் பதியப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டதா? என்றும் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும் முழுவதும் ஆய்வு செய்யப்பட உள்ளது.
இன்று நடைபெறும் விசாரணையைத் தொடர்ந்து வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் விசாரைண நடைபெற உள்ளது. முன்னதாக, மாணவி தற்கொலை வழக்கில் மாணவியை கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டிய விடுதி வார்டன் சகாயமேரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்திருந்த தஞ்சை மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா மாணவியின் தற்கொலை தொடர்பான முதற்கட்ட விசாரணையில் மாணவியை மதம்மாற்றச் சொல்லியதாக எந்தவொரு தகவலும் விசாரணையில் பெறவில்லை என்று கூறியிருந்தார். மேலும், நேற்று பேட்டி அளித்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவி தற்கொலை தொடர்பான விவகாரத்தில் மதம்மாறச் சொல்லியதாக விசாரணையில் எந்த குற்றச்சாட்டும் இல்லை என்று கூறியிருந்தார். மேலும், இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்