Crime: சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
காவல்துறையினரிடம் இருந்து தப்பி சென்ற போது கால் தவறி கீழே விழுந்ததால் படுகாயம்.

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 40). இவர் பனமரத்துப்பட்டி அடுத்துள்ள ஆத்துப்புதூரில் கல் உடைக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில மாதங்களாக ஆத்துப்புதூரில் சம்பத் தங்கி கல் உடைக்கும் வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சம்பத் அதே பகுதியில் வசிக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து பனமரத்துப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். பின்னர் இதுகுறித்து கொண்டலாம்பட்டி மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதன் பெயரில் சேலம் ரூரல் டி.எஸ்.பி. தையல்நாயகி மற்றும் போலீசார் விசாரித்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அப்போது சம்பத் பனமரத்துப்பட்டி அருகே உள்ள கரடு பகுதியில் தப்பி ஓடி உள்ளார். அவரை காவல்துறையினர் துரத்திச் சென்றனர். அப்போது சம்பத் கால் தவறி கீழே விழுந்து வலது காலில் படுகாயம் அடைந்தான். பின்னர் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் சம்பத் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அதன்பின் சம்பத் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பத்திற்கு வலது காலில் பலத்த காயமடைந்து உள்ளார். இதனால் அவருக்கு சிகிச்சை முடிந்த பின்னர் சேலம் சிறையில் அடைக்க காவல்துறையினர் முடிவு செய்து உள்ளனர்.





















