lock Up Death: ”அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார்” - 5 காவலர்கள் கைது, சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Ajith kumar lock Up Death: சிவகங்கையில் அஜித்குமார் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களையும் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Ajith kumar lock Up Death: சிவகங்கையில் அஜித்குமார் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.
அஜித்குமார் மரண வழக்கு
திருப்புவனம் அடுத்த மடப்புரம் கோயிலில் தற்காலிக காவலராக பணியாற்றி வந்த அஜித் குமார், நகை திருட்டு வழக்கி காவல்துறையின் விசாரணையின்போது உயிரிழந்தார். காவல்துறையினர் தாக்கியதாலேயே அவர் உயிரிழந்ததாக, உறவினர்கள் குற்றம்சாட்டிய நிலையில் அது பெரும் பிரச்னையாக வெடித்தது. பிரேத பரிசோதனையிலும் அஜித்குமாரின் உடலில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 6 காவல்ர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
கொலை வழக்காக மாற்றம் - 5 காவலர்கள் கைது
இந்நிலையில் தான், அஜித்குமாரின் மரண வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக வழக்கில் தொடர்புடைய 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு திருப்புவனம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா மற்றும் சங்கர மணிகண்டன் ஆகிய காவலர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை விளக்கம்:
காவல்துறை வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், “உயிரிழந்த அஜித்குமாரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் 5 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். சட்டப்பிரிவுகள் மாற்றப்பட்டு, கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது. பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்களில் காவல் வாகன ஓட்டுனர் ராமச்சந்திரன், அஜித்குமார் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் நடந்த இடத்திற்கு செல்லாததால் அவர் கைது செய்யப்படவில்லை. காவல்நிலைய மரண வழக்குகளில் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டன. காவல்துறை நியாயமான, வெளிப்படையான மற்றும் பாரபட்சம் அற்ற முறையில் செயல்பட்டுள்ளது” என காவல்துறை விளக்கமளித்துள்ளது.
சிபிசிஐடி வசம் வழக்கு:
வழக்கமாக, பிரேத பரிசோதனை 1 முதல் 2 மணி நேர அளவில் முடிந்து விடும். ஆனால், அஜித்குமார் உடலின் பிரேத பரிசோதனை 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றுள்ளது. இது அவரது உடலில் அசாதாரண அளவிலான தாக்கங்கள் மற்றும் காயங்கள் இருந்ததை உறுதி செய்வதாக குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அஜித்குமார் மரணம் தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, “இறந்த நபர் தீவிரவாதியா? அவர் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று கொல்லப்பட்டாரா? சாதாரண வழக்கில், விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட அவரை கடுமையாக தாக்கியது ஏன்.? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும், காவல்துறையின் அராஜகத்தை அந்த துறையின் அமைச்சரான முதலமைச்சர் ஸ்டாலினால் கட்டுப்படுத்த முடியவில்லையா? என சரமாரிய கேள்விகளை எழுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து தான், டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், அஜித்குமார் கொலை வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது 5 காவலர்கள் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.





















