Sivasankar baba: சிவசங்கர் பாபா வழக்கு: 300 பக்க குற்றப்பத்திரிகை.. 40 பேரின் வாக்குமூலம்.. தாக்கல் செய்தது சிபிசிஐடி!
சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது சென்னை சிபிசிஐடி போலீஸ்
முன்னாள் மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் 16ஆம் தேதி கைது செய்யப்பட்ட போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீதான மூன்றாவது வழக்கைப் போக்சோ பிரிவுக்கு மாற்றி வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுவரை 18 முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபாவிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. பள்ளியில் உள்ள சொகுசு அறைக்கு நேராக அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், ஆபாசமாகப் பேச பயன்படுத்திய பள்ளியின் மெயில் ஐடி, பென் ட்ரைவ், சிடிக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அண்மையில் இதுதொடர்பாக அவரது பள்ளி ஆசிரியைகளிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்நிலையில், மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை தந்த வழக்கில் சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 59 நாட்களில் முதல் போக்சோ வழக்கில் சிவசங்கர் பாபா, ஆசிரியைகள் பாரதி, சுஷ்மிதா, தீபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் 40 நபர்களில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள காரணத்தினால் சிவசங்கர் பாபாக்கு ஜாமீன் கிடைப்பதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாபா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இரண்டு நாட்களுக்கு முன்பு ஒத்திவைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், ஜாமின் மனு தள்ளுபடி செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, சிவசங்கர் பாபா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த பொழுது ,bஅவர் தரப்பில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடந்த 2015, 2018, 2020 ஆம் ஆண்டுகளில் பாலியல் தொல்லை கொடுத்ததாக முன்னாள் மாணவிகள் கொடுத்த புகார்களில் இந்த ஆண்டு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் போக்சோ சட்டம், இந்திய தண்டனை சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகியவற்றின் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3 முறை கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், புகார் அளித்த மாணவிகளில் ஒருவர் தன்னுடைய பள்ளி படிப்பை முடித்து சென்ற பிறகும் 20 நடன நிகழ்ச்சிகளை தன்னுடைய பள்ளியில் நடத்தி உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கடந்த 2015 ஆம் ஆண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறும் மாணவி ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பாபாவை குறித்தும் அவருடைய பள்ளியை குறித்தும் புகழ்ந்து சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கைதுக்கு பிறகு சிவசங்கர் பாபாவுக்கு இருமுறை நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பியதாக அவர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
அதேபோல, வெறும் புகாரின் அடிப்படையில் எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் எனவும் அவர் வாதிட்டார்.
10 ஆண்டுகளுக்கு குறைவான தண்டனைக்குரிய சட்டப்பிரிவில் கைது செய்யப்படுபவர்கள் மீது 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என விதிகள் உள்ளதாக தெரிவித்த அவர், பாபா கைது செய்யப்பட்டு இன்றுடன் 57 நாட்கள் ஆன பிறகும் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் பாபாவுக்கு ஜாமின் வழங்க வேண்டும் என வாதம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது