Government Doctors Arrest : ஹோட்டலில் பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொல்லை.. ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் இருவர் கைது!
பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்த ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
![Government Doctors Arrest : ஹோட்டலில் பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொல்லை.. ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் இருவர் கைது! sexual harrasment to women doctors two government doctors arrest Government Doctors Arrest : ஹோட்டலில் பெண் டாக்டர்களுக்கு பாலியல் தொல்லை.. ராஜீவ்காந்தி அரசு மருத்துவர்கள் இருவர் கைது!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/19/07986fcec0687e3054e3833bfb754386_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் ஒன்று ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆகும். தினசரி ஆயிரக்கணக்கான நோயாளிகள் ராஜீவ்காந்தி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.
கடந்தாண்டு கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்தபோது, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு தேனாம்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனித்தனி அறைகளுடன் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்கு பெண் மருத்துவர்களுக்கும் தனித்தனி அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது, 35 வயதான மருத்துவர் வெற்றிச்செல்வன் என்பவர் பெண் மருத்துவர் ஒருவரின் அறைக்கு சென்று அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அதே சமயத்தில், 28 வயதே நிரம்பிய மோகன்ராஜ் என்ற மற்றொரு மருத்துவரும் வேறொரு பெண் மருத்துவரின் அறைக்கு சென்று அவரிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். இந்த சம்பவத்தால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான பெண் மருத்துவர்கள் இருவரும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, இதுதொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது.
அந்த குழுவினர் நடத்திய விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட மருத்துவர்கள் இருவரும், பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து, பெண் மருத்துவர்கள் இருவரும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின்பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், பெண் மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மருத்துவர்கள் வெற்றிச்செல்வன் மற்றும் மோகன்ராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முக்கிய மருத்துவமனையான ராஜீவ்காந்தி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பெண் மருத்துவர்களுக்கே, உடன் பணியாற்றும் சக மருத்துவர்கள் பாலியல் தொல்லை அளித்திருப்பதும், இதனால் அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதும் நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே பணிபுரியும் இடங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை போலீசார் கைது செய்தனர். பாலியல் வன்கொடுமை மற்றும் சீண்டல்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)