மயிலாடுதுறை : கடத்தப்பட்ட மது பாட்டில்களை சேஸிங்கில் பிடித்த போலீசார்..!
காரைக்காலிருந்து மினி லோடு வேனில் மதுபாட்டில்கள் கடத்திய வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மருந்தகங்கள்,உணவகங்கள், பால் கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளிலும் செயல்பட தமிழக அரசு தடை விதித்திருந்தது. குறிப்பாக அரசு மதுபான கடை டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டு உள்ளது. இந்நிலையில் வைரஸ் தொற்றின் தாக்கம் பல்வேறு மாவட்டங்களில் குறைய தொடங்கியதை அடுத்து சில தளர்வுகளுடன் தமிழக அரசு ஊரடங்கு நீடித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள புதுச்சேரி மாநிலத்தில் கொரானா கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு கடந்த 8-ஆம் தேதி முதல் மதுபான கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக மதுக்கடைகள் திறக்கப்படாததால் மது பிரியர்கள் மது அருந்த முடியாமல் தவியாய் தவித்துவந்தனர்.
மேலும் மதுவிற்கு அடிமையானவர்கள் பலர் தங்களை மதுபோதையில் வைத்திருப்பதற்காக கள்ளச்சந்தையில் சாராயம் வாங்கி குடிப்பதும், தாங்களாகவே சாராயம் தயாரிப்பது, டாஸ்மாக் கடைகளில் ஓட்டை போட்டு மதுபானங்களை திருடுவது என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக கள்ளச்சாராயம், ரசாயன மருந்துகளை தண்ணீர் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவங்களும் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்தேறி வருகிறது.
இந்த சூழலில் தமிழகத்தை சேர்ந்த மதுப்பிரியர்கள் அருகில் உள்ள காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகள் தினத்தை அடுத்து அதிக அளவில் மதுபாட்டில்கள் வாங்கிவந்து குடிக்கத்தொடங்கியுள்ளனர். அதனால் பலர் அதிக அளவில் காரைக்கால் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி கடத்திவருவதை தடுக்கும் வகையில் கடந்த 2 நாட்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் தீவிர வாகனசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் குத்தாலம் காவல்நிலைய ஆய்வாளர் வள்ளி தலைமையில் போலீசார் சேத்திராபாலபுரம் கடைவீதியில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, மயிலாடுதுறை பகுதியில் இருந்து வந்த மினிலோடு வேனை நிறுத்தியுள்ளனர். ஆனால் வேன் நிற்காமல் சென்றுள்ளது. உடனே போலீசார் மினிவேனை துரத்திச் சென்று பிடித்து சோதனை செய்ததில், அதில் புதுச்சேரி மாநில குவாட்டர் மதுபாட்டில்கள் 12 அட்டைப்பெட்டிகளில் 576 பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. அதனையடுத்து விசாரணை மேற்கொண்டதில் மினி லோடு வேனில், குத்தாலத்தை சேர்ந்த ஸ்ரீராம் (24) சத்தியமூர்த்தி (34), இளங்கோவன் (24) ஆகிய மூவரும் காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி கும்பகோணம் கொண்டுசெல்ல இருந்தது தெரியவந்தது. இது குறித்து குத்தாலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 பேரை கைது செய்தனர். மினி லோடுவேன் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.